4940. | சந்தப்பூம்பந்தர் வேய்ந்த தமனியஅரங்கில், தம்தம் சிந்தித்ததுஉதவும் தெய்வ மணிவிளக்கு, ஒளிரும் சேக்கை, வந்து ஒத்தும்திருத மாக்கள் விளம்பிதநெறிவழாமை கந்தர்ப்ப மகளிர் ஆடும் நாடகம்காண்கின்றாரை- |
சந்தம் -அழகிய;பூம்பந்தர் - பூவால் அமைந்த பந்தல்; வேய்ந்த - மேற்கட்டியாக அமைந்ததும்; சிந்தித்தது உதவும் - நினைத்தவற்றை வழங்கும்; தெய்வ - தெய்வத்தன்மை பெற்ற; மணிவிளக்கு ஒளிரும் - மணிகள் ஒளி வீசுவதும் (ஆன); தமனிய அரங்கில் - பொன்னாலான அரங்கத்தில்; வந்து - இசை மரபை நன்றாக அறிந்து; திருதம் ஒத்தும் மாக்கள் - தாளத்தை ஒத்துகின்றவர்களின்; விளம்பித நெறி - விளம்பித வழிகள்; வழாமை - தவறுபடாமல்; கந்தர்ப்ப மகளிர் - காந்தருவப் பெண்கள்; ஆடும் - ஆடுகின்ற; நாடகம் - நாடகத்தை; தம்தம் - தங்கள் தங்கட்குரிய; சேக்கை - ஆசனத்தில் இருந்து கொண்டு; காண்கின்றாரை - காண்பவராகிய அரக்க மகளிரை. விளக்கு, அரங்கிற்கு இன்றியமையாதது. அதை அறிந்தால் அதைக் காணும் அவைக்குச் சேர்த்து மயங்கார் - இவ் விளக்கை மாண் விளக்கு என்பர் அடிகள் (சிலம்பு 3 - 108) சேக்கை என்பதற்கு 'நாயகப்பந்தி' என்று பொருள் கொள்ளின். சேக்கை - ஆடும் நாயகப் பத்தி. திருதம் - தாளவகை. 'விளம்பிதம்' என்பது தாளஒத்துக் கேற்ற கட்டுகளாகும். இசை நூற்கூறு - 'விளம்பின' என்றபாடம் பொருட்சிறப்பின்று. (106) |