4947.

நலன்உறுகணவர் தம்மை
     நவைஉறப்பிரிந்து, விம்மும்
முலைஉறு கலவைதீய,
     முள்இலாமுளரிச் செங்கேழ்
மலர்மிசைமலர்பூத் தென்ன,
     மலர்க்கையால் வதனம் தாங்கி,

அலமரும்உயிரி னோடும்
     நெடிதுஉயிர்த்து அயர்கின்றாரை-

     நலன்உறு -அழகுமிக்க; கணவர்தம்மை - கணவர் பால்; நவைஉற -
குற்றம் உண்டாக; பிரிந்து - ஊடலால் அவரை விட்டு நீங்கி; விம்மும் -
பருத்துள்ள; முலை - முலையின்கண்ணே; உறுகலவை - மிகுதியாகப்
பூசப்பெற்ற சந்தனம்; தீய - தீய்ந்து போகும்படி; முள்இலா - முள்ளே
இல்லாத; செங்கேழ்  - சிவந்த ஒளிபெற்ற; முளரிமலர்மிசை - தாமரை
மலரில்; மலர் பூத்த என்ன - மலரானது மலர்ந்தாற் போல; மலர்க்கையில்
வதனம் தாங்கி -
மலர் போன்ற கையால் முகத்தைத் தாங்கி; அலமரும் -
ஊசலாடுகின்ற; உயிரினோடும் - உயிருடன்; நெடிது உயிர்த்து - பெருமூச்சு
விட்டு; அயர்கின்றாரை - கவலைப்படுகின்ற மகளிர்களையும்;

    துன்பம்உண்டாக்கப் பிரிந்தவர் துன்புறுதல் அதிசயம் - இவர்கள்
கோபம் ஊடற்கோபமோ ? விரகக் கோபமோ ? உணர்வரிது. சேக்கிழார்,
புலவியோ, பிரிவோ என்பார் (ஏயர்கோன் 315) திருக்குறள் இந்நிலையை
'நிறையழிதல்' என்னும் அதிகாரத்தில் பேசும். கணவர் தம்மை - கணவர்பால் -
இரண்டன் உருபை ஏழன் உருபாக்குக. நவை - துன்பம்.            (113)