4951..

பள்ளியில், மைந்த ரோடும்
     ஊடிய பண்புநீங்கி,
ஒள்ளிய கலவிப்பூசல்
     உடற்றுதற்குஉருத்த நெஞ்சர்,
மெள்ளவே இமையைநீக்கி,
     அஞ்சன இழுதுவேய்ந்த,
கள்ளவாள்நெடுங்கண் என்னும்
     வாளுறைகழிக்கின்றாரை-

     பள்ளியில் -படுக்கையில்; மைந்தரோடும் - தம்முடைய கணவருடன்;
ஊடிய பண்பு நீங்கி - பிணங்கிய இயல்பை விடுத்து; ஒள்ளிய - சிறந்த;
கலவிப் பூசல் உடற்றுதற்கு - புணர்ச்சிப் போர்
 புரிவதற்கு; உருத்தநெஞ்சர்
-
சீறிய மனத்தையுடையவராய்; மெள்ள - மெதுவாக; இமையை நீக்கி -
கண்ணிமைகளைத் திறந்து; அஞ்சனம் - மையாகிய; இழுது வேய்ந்த - நெய்
பூசப் பெற்ற; கள்ளவாள் - வஞ்சகமும் கொடுமையும் பெற்ற; நெடுங்கண்
என்னும் -
பெரிய கண்கள் ஆகிய; வாள் - வாளாயுதத்தை; உறை
கழிக்கின்றாரை -
உறையிலிருந்து கழித்தெடுப்பவரையும்.

    ஈங்கு பேசப்படும்மகளிர் ஊடலால் உறங்குவதுபோல் பாசாங்கு
புரிபவர்கள். அவர்களின் உள்ளக் காதலே ஊடலை நீக்கிற்று. கணவன்
காணாதபோது அவனைக் கண்டு அவன் நிலையை ஆராய்தலின் கள்ள
நெடுங்கண் என்றார். கலிங்கத்துப் பரணி இத்துயிலைப் பொய்த்துயில் என்று
பேசும். போர் என்றமையால் 'உருத்த நெஞ்சர்' என்றார். மை நெய்யாகவும்,
இமை உறையாகவும் கொள்க. இழையை நீக்கி என்பது பாடமாயின் அணிகள்
கலவிப் போர்க்கு இடையூறு நல்கிற்று என்று நீங்கியதாகக் கொள்க (கம்ப.
1017).                                                     (117)