4952.

ஓவியம்அனைய மாதர்
     ஊடினர்,உணர்வோடு உள்ளம்
மேவிய கரணம்மற்றும்
     கொழுநரோடுஒழிய, யாணர்த்
தூவியம் பேடைஎன்ன
     மின்இடைதுவள ஏகி,
ஆவியும் தாமுமேபுக்கு
     அருங்கதவு அடைக்கின்றாரை-

     உணர்வோடுஉள்ளம் - உணர்ச்சியும்ஊக்கமும்; மேவிய கரணம் -
ஒன்றியிருக்கும் அந்தக் கரணங்களும்; மற்றும் - பிற பொருள்களும்;
கொழுநரோடு ஒழிய - கணவர்பால் சென்று தங்க (தனித்திருந்து); ஊடினர் -
ஊடல் கொண்டு; யாணர் - அழகிய; தூவியம் பேடை என்ன -
இறகையுடைய பெண் அன்னம் போல; மின் இடை - மின்னல் போன்ற
இடையானது; துவள ஏகி - துவளும்படியாகப் புறம்பே போய்; ஆவியும்
தாமுமேயாய் -
பெருமூச்சும் தாமுமாக இருந்துகொண்டு; அருங்கதவு
அடைக்கின்றார் -
சிறந்த கதவை அடைக்கின்ற; ஓவியம் அனைய மாதர்
(ஐ) -
சித்திரம் போன்ற மாதரையும்.

     கரணம்-மனம்,புத்தி சித்தம், அகங்காரம். உணர்வு-அறிவு உள்ளம்-
ஊக்கம். தலைவிக்கு உதவியாக இருந்தது பெருமூச்சே., உள்ளம் மேவிய
கரணம் என்பதை ஒரு தொடராக்கி அந்தக் கரணம் என்று உரை கூறுவர்,
சிலர். உள்ளம் - மனம் என்பர் சிலர். ஆவி-உயிர் என்று கூறப்பெற்றது.
ஆவி-பெருமூச்சு. 'உணர்வு அழுங்க உயிர்த்தனள் ஆவியே' (கம்ப. 1092.) ஐ
உருபு மாதருடன் கூட்டப் பெற்றது - அடைக்கின்ற மாதரை என அமைக்க.
                                                          (118)