கலிவிருத்தம் 4956. | ஓசனைஏழ்அகன்று உயர்ந்தது; உம்பரின் வாசவன் மணிமுடிகவித்த மண்டபம் ஏசுற விளங்கியது;இருளை எண்வகை ஆசையின்நிலைகெட அலைக்கல் ஆன்றது. |
(கும்பன் அரண்மனை) ஏழ் ஓசனை -ஏழு யோசனை தூரம்; அகன்று உயர்ந்தது - விரிவு பெற்று அதற்கேற்ப உயர்ந்தது; உம்பரின் - விண்ணுலகத்தில்; வாசவன் - இந்திரன்; மணி முடி கவித்த மண்டபம் - அழகிய முடியைத் தரித்துக் கொண்ட மண்டபமானது; ஏசுற - பழியடையும்படி; விளங்கியது - (அதனினும் சிறப்பாக) ஒளி வீசுவது; எண்வகை ஆசையின் - எட்டுத் திக்கின் கண்ணும் உள்ள; இருள் - இருளானது நிலைகெட - நிலைகெட்டு அழிய; அலைக்கல் ஆன்றது - ஓடச்செய்தலால் (மன) நிறைவு பெறுவது. இந்திரன் மணிமுடிசூடும் மண்டபம் இந்திரனின் மணிமுடியைச் சூடிய மண்டபம் என்றும் இந்திரனின் மணி முடியைப் பறித்துக் கொண்டு வந்து கும்பகர்ணன் அதை அணிந்து கொண்டமண்டபம் என்றும் கூறலாம். 'மன்னும் புரந்தரன்தன் முடிபதித்த மணிமண்டபத்து' என்று எம்பெருமான் கவிராயர் பாடுகின்றார் (தக்கை ராமாயணம் சௌந்தரிய - ஊர்தேடு. 9) கலிவிருத்தம். ஊர் தேடு படலத்தில் 43 ஆம் பாடலின் குறிப்பைக் காண்க. (122) |