குறுகி,நோக்கி, மற்று அவன்தலை ஒருபதும், குறித்த இறுகு திண்புயம்இருபதும், 'இவற்குஇலை' என்னா, மறுகி ஏறியமுனிவுஎனும் வடவைவெங் கனலை அறிவு எனும்பெரும் பரவை அம் புனலினால், அவித்தான்.
மற்று - பிறகு; குறுகிநோக்கி - (அரக்கனை) நெருங்கிப் பார்த்து; அவன் - அந்த இராவணனுக்கு அடையாளமான; ஒருபது தலையும் - பத்துத் தலைகளும்; குறித்த - கணக்கிட்ட; இறுகு - செறிவைப் பெற்றுள்ள; இருபது திண்புயமும் - இருபது தோள்களும்; இவற்கு இலை - இந்த அரக்கனுக்குக் கிடையாது; என்னா - என்று ஆராய்ந்து அறிந்து (அனுமன்); மறுகி - உள்ளம் கலங்கி; ஏறிய - மேலும் மேலும் பெருகி வருகின்ற; முனிவு எனும் - கோபம் என்கின்ற; வடவை வெங்கனலை - கொடிய வடவைத் தீயை; அறிவு எனும் - ஞானம் என்கின்ற; பெரும் - பெருமையுடைய; அம் -அழகிய; பரவைப் புனலினால் - கடலின் தண்ணீரினால்; அவித்தான் - அணைத்தான். எதிரே இருப்பவன்இராவணன் என்று கருதியபோது உண்டாகிய சீற்றம் ( இராவணன் அல்லன் என்ற போது) அவிந்தது. இராவணன் செய்த தீச்செயலால் அனுமன் அவன்பால் சீற்றம் கொண்டான். வெறும் புல்லர் தீமையை வேரற்றொழிக்கும்..... கொடும் சினம் மாசற்றார் கோள் (உரைச் சூத்திரம்) (131)