கும்பகருணனைக் கடந்து அப்பால்சென்று தேடுதல்   

4966.

அவித்துநின்று, எவன் ஆயினும் ஆக என்று அங்கை
கவித்துநீங்கிடச் சில்பகல் என்பது கருதாச்
செவிக்குத்தேன்என இராகவன் புகழினைத் திருத்தும்
கவிக்கு நாயகன்அனையவன் உறையுளைக் கடந்தான்.

     இராகவன் புகழினை-  இராமபிரானுடைய கீர்த்தியை; செவிக்குத்
தேன் என -
செவிகட்குத் தேன் போல; திருத்தும் -  பரிமாறுகின்ற; கவிக்குநாயகன் -  வானரர்களின் தலைவனாகிய அனுமன்; அவித்து
நின்று -
 கோபக்கனலைத் தணித்துக் கொண்டு; எவன் ஆயினும் ஆக -
இங்கேயிருப்பவன் யாவன் ஆயினும் ஆகட்டும்;  என்று - என்று எண்ணி;
அங்கைகவித்து -
 அகங்கையைப் புறங்கை ஆக்கி; 'நீங்கிட சிலபகல்' -
இறப்பதற்குச் சில நாள்களே உள்ளன; என்பது கருதா -  என்பதை
மனத்திலே எண்ணி; அனையவன் -  அந்த கும்பகருணனின்; உறையுளை -
மாளிகையை; கடந்தான் - புறந்தள்ளிச் சென்றான்.

     இராகவன் புகழினைத் தன் செவிக்கும் பிறர் செவிக்கும்பரிமாறும்
அனுமன் திருத்துதல் - பரிமாறுதல். செம்மையாக்குதல் என்றும் கூறலாம்.
எவ்விடத்தும் ராமன் சரிதையாம் - அவ்விடத்தினும் அஞ்சலி யத்தனாய்
இருந்து இராமகாதை கட்பவன் அனுமன் ஆதலின், புகழினைத் திருத்தும்
கவிக்கு நாயகன் என்றான். திருத்துதல் - கறி திருத்துதல் என்பதுபோலப்
பக்குவம் செய்தலாம். உறையுள் - தங்குமிடம். கிட - இகழ்ச்சிக் குறிப்பு.
இப்பாடல் பின்னிரண்டு வரிகள் கவிச்சக்கரவர்த்தி கம்பனுக்கும் பொருந்தும்
என்பர் சான்றோர். கம்பனுக்குக் கொள்ளுங்கால் திருத்தும் என்பது
செம்மைப்படுத்தல் என்பது பொருள்.                             (132)