வீடணனைக் காணுதல் 4969. | ஏந்தல்,இவ்வகை எவ்வழி மருங்கினும் எய்தி, காந்தள்மெல்விரல் மடந்தையர் யாரையும் காண்பான் வேந்தர்,வேதியர், மேல்உளோர், கீழ்உளோர், விரும்பப் போந்தபுண்ணியன் கண்அகன் கோயிலுள் புக்கான். |
ஏந்தல் -அன்பர்களைப் பாதுகாக்கும் அனுமன்; காந்தள் மெல்விரல் - காந்தள் இதழ்போன்ற மெல்லிய விரல்களைப் பெற்ற; மடந்தையர் யாரையும் - பெண்கள் யாவரையும்; காண்பான் - காணும் பொருட்டாக; இவ்வகை - (நுணுகிப் பெருகி) இப்படி; எவ்வழி மருங்கினும் - எல்லா இடங்களிலும்; எய்தி - அடைந்து; வேந்தர் வேதியர் - அரசர்களும் அந்தணர்களும்; மேல் உளோர் - தேவர்களும்; கீழ்உளோர் - நாகலோகத்தவர்களும்; விரும்ப - விருப்பம் கொள்ளும்படி; போந்த புண்ணியன் - அவதரித்த வீடணனின்; கண் அகன் - இடம் அகன்ற; கோயிலுள் புக்கான் - அரண்மனைக்குள் நுழைந்தான். அனுமன், மகளிர்யாவரையும் ஆராய்ந்து காண்பதற்காக, எல்லா இடங்களிலும் தேடி வீடணனின் அரண்மனையை அடைந்தான். ஏந்தல் - அன்பர்களை ஏந்துபவன் (காரணப் பெயர்) காந்தள் மலரைக் குறிக்காது இதழைக்குறித்தது ஆகுபெயர். மலர் கைக்கும், இதழ் விரலுக்கும் உவமையாகும். புண்ணியன் என்று வீடணனைக் குறித்தது போற்றி உணரத்தக்கது. (135) |