4970.

பளிக்கு வேதிகைப் பவளத்தின் கூடத்துப் பசுந்தேன்
துளிக்கும் கற்பகப் பந்தரில், கருநிறத் தோர்பால்
வெளித்து வைகுதல்அரிதுஎன  அவர்உரு மேவி,
ஒளித்துவாழ்கின்ற தருமம் அன்னான்தனை உற்றான்.

(அனுமன்)

    கருநிறத்தோர்பால் - கரிய நிறமுடையஅரக்கர்களின் நடுவில்;
வெளித்து -
வெண்ணிறங் கொண்டு (வெளிப்படையாக); வைகுதல் அரிது
என -
 வாழ்வது கடினம் என்று கருதி; அவர் உரு மேவி -
அவ்வரக்கர்களின் கரிய வடிவத்தை அடைந்து; பவளத்தின் கூடத்து -
பவளத்தாற் செய்யப்பட்ட கூடத்திலே; பசுந்தேன் துளிக்கும் - பசுமையான
தேன் சிதறுகின்ற; கற்பகப் பந்தரில் - கற்பகப் பந்தலின் அடியில்; பளிக்கு
வேதிகை -
பளிங்காலமைந்த மேடையில்; ஒளித்து - மறைத்து; வாழ்கின்ற -வாழும்படியான; தருமம் அன்னான்தனை - தருமம் போன்ற வீடணனை;
உற்றான் -
அணுகிப் பார்த்தான்.

    அறத்தின் நிறம்வெண்மை என்பது இலக்கிய வழக்கு. இராமபிரானின்
பல்லின் வெண்மையைப் பேசவந்த அனுமன், 'துறையறத்தின் வித்து முளைத்த
அங்குரல் கொல்' என்று பேசினான் (கம்ப. 5280) " ஆரருள சுரக்கும் நீதி
அறம் நிறம்கரிதோ" (கம்ப. 6492) எனப்பின் வருவதும் இங்கு கருதுக.  (135)