4973. | ஏதிஏந்திய தடக்கையர், பிறைஎயிறு இலங்க மூதுரைப் பெருங்கதைகளும் பிதிர்களும் மொழிவார் ஓதில் ஆயிரம்ஆயிரம் உறுவலி அரக்கர் காது வெஞ்சினக்களியினர், காவலைக் கடந்தான். |
(அவ்விடத்தில்)(அனுமன்) ஏதி ஏந்திய -ஆயுதங்களைத் தாங்கிய; தடக்கையர் - பெருங்கரங்களைப் பெற்றவர்களும்; ஓதில் - பேசத் தொடங்கினால்; பிறை எயிறு இலங்க - பிறையைப் போன்ற பற்கள் துலங்க; மூதுரை - பழமொழிகளையும்; பெருங்கதைகளும் - பெரிய கதைகளையும்; பிதிர்களும் - விடுகதைகளையும்; மொழிவார் - பேசுபவர்களும்; காது - பகைவர்களைக் கொல்லும்; வெஞ்சினக் களியினர் - சீற்றமாகிய மதுவை அருந்தியவர்களும் ஆகிய; உறுவலி - மிக்க வலிமையுடைய; ஆயிரம் ஆயிரம் அரக்கர் - பல்லாயிரக்கணக்கான எண்ணிக்கை பெற்ற அரக்கர்கள்; காவலை - காக்கும் இடங்களை; கடந்தான் - தாண்டி உள்ளே போனான். ஓதில் என்னும்எச்சச் சொல் மூதுரை முதலானவற்றைப் பேசுபவர்களைச் சாரும். பலர் பழமொழியில்லாமலும் விடுகதையில்லாமலும் பேசத்தெரியாமல் உள்ளனர். ஏது நுதலிய முதுமொழி என்பர் காப்பியர். பிசியைக் கவிச்சக்கரவர்த்தி 'பிதிர்' என்றார். பிசியின் இலக்கணம் தொல்காப்பியச் செய்யுளியலிற் காண்க. பிசி, பிதிராகி இன்று புதிராகிவிட்டது. (139) |