அனுமன் பிறஇடங்களில் தேடுதல் 4977 | என்றுகைம்மறி்த்து 'இடைநின்று காலத்தை இகப்பது அன்று; போவதுஎன்று, ஆயிரம் ஆயிரத் தடங்காத் துன்று மாளிகைஒளிகள் துரிசு அறத் துருவி சென்று தேடினன்;இந்திர சித்தனைத் தீர்ந்தான். |
என்று - என்று(இந்திரசித்தனைப் புகழ்ந்து) கூறி; கைமறித்து - இது இப்படி இருக்கட்டும் என்று கையை அசைத்து; இடை நின்று காலத்தை - தனக்கும் தேடத் தகும் பிராட்டிக்கும் நடுவில் நின்ற காலத்தை (புகழ்வதில்); இகப்பது - கடத்துவது; அன்று - தகாது; போவது - தேடிச் செல்வது (நல்லது); என்று - என்று கருதி; இந்திர சித்தனைத்தீர்ந்தான் - இந்திர சித்தனைநீங்கி; ஆயிரம் ஆயிரத்து அடங்கா - ஆயிரத்தால் பெருக்கப்பட்ட ஆயிரம் என்னும் எண்ணிக்கையில் அடங்காமல்; துன்று - நெருங்கியுள்ள; மாளிகை ஓளிகள் - மாளிகை வரிசைகளை ; துரிசு அற - குற்றங்கள் இல்லாமல்; துருவிச் சென்று - ஊடுருவிப் போய்; தேடினன் - தேடிப் பார்த்தான். கைமறித்தல் -சரி மேலே ஆவன செய்வோம் என்னும் பொருளை உணர்த்தும் கரச்செயல். கைமறித்தல், கவிச்சக்கரவர்த்தி விரும்பும் சொல். துருவி, தேடினன் - என்ற தொடர் ஆழமானது. துருவுதல் ஊடுருவிப் பார்த்தல். கவிச்சக்கரவர்த்தி இதனைத் தேடுதல் என்னும் சாதாரணப் பொருளிலும், ஊடுருவிப் பார்த்தல் என்னும் சார்புப் பொருளிலும் பேசுவார். 'துருவுமாமணி ஆரம்' (கம்ப. 1105) என்ற இடத்தில் துளையிடுதல் என்னும் பொருள் தந்தது. அதன் சார்புப் பொருளே ஊடுருவல். (143) |