4986.

நலத்தமாதர் நறை அகில், நாவியும்,
அலத்தகக்குழம்பும், செறிந்து, ஆடிய
இலக்கணக்களிறோடு இளமெல் நடைக்
குலப் பிடிக்கும்ஓர் ஊடல் கொடுக்குமால்

(அவ்வகழி)

     நலத்த மாதர் -அழகியபெண்கள்; நறை அகில் - கூந்தலுக்கு
ஊட்டிய அகிற்புகையும்; நாவியும் - (அவர்கள்) மேனியின் கஸ்தூரியும்;
அலத்தகக் குழம்பும் - (அவர்கள்) பாதத்திற் பூசிய செம்பஞ்சுக் குழம்பும்;
செறிந்து - அகழி நீரிற் கரைந்து; ஆடிய - நீராடிய; இலக்கணக் களிறோடு
-
உத்தம இலக்கணம் அமைந்த ஆண்யானைகட்கும்; இள - இளமையும்;
மெல்நடை - மென்மையும் (அமைந்த); குலப்பிடிக்கும் - உயர்குலத்துப்பெண்
யானைகட்கும்; ஓர் - ஒப்பற்ற; ஊடல் கொடுக்கும் - ஊடலை வழங்கும்.

     மகளிரால் நிறம் வேறுபட்ட புனல் மூழ்கிய பறவை ஊடல் கொள்வதை,
'குதலையர் குடைந்த தண்புனல்வாய், குங்குமச் சுவடுற, ஊடிப் பூவுறங்கினும்
புள் உறங்கா தன பொய்கை" என்று கூறியது (கம்ப.460) காண்க.      (152)