4987.

நறவு நாறியநாள்நறும் தாமரை
துறைகள் தோறும்முகிழ்த்தன தோன்றுமால்-
சிறையின்எய்திய செல்வி முகத்தினோடு
உறவு தாம்உடையார் ஒடுங்கார்களோ ?

     நறவு நாறிய -தேன்மணம்வீசுகின்ற; நாள் நறுந் தாமரை - நறுமணம்வீசும் புதிய தாமரைகள்; துறைகள் தோறும் - அவ்வகழியின் எல்லாத்துறைகளிலும்; முகிழ்த்தன தோன்றும் - குவிந்து தோன்றும்; சிறை
எய்திய -
சிறையை அடைந்த; செல்வி முகத்தினோடு - பிராட்டியின்
முகத்துடன்; உறவு உடையார்தாம் - உறவைப்பெற்றவர்கள்; ஒடுங்கார்களோ
-
ஒடுங்காமல் இருப்பார்களோ ?

     சீதை சிறைபுக்கதால் அவள் முகம் போன்ற தாமரைகள் குவிந்து
கிடந்தன - தற்குறிப்பேற்றம். சிறையின் எய்திய செல்வி - என்பதில் உள்ள
'இன்' அசை சிலம்பின் வன்வார்ச் சிறுபறைகரங்க என்னும் சிந்தாமணிப்
பாடலுக்கு (கோவிந்தை - 50) உரை வழங்கிய இனியர் 'இன்' அசை என்றார்.
சிறை எய்திய செல்வி என்க. தாம் - உரையசை.                   (153)