4988.

பளிங்கு செற்றிக் குயிற்றிய பாய்ஒளி
விளிம்பும்,வெள்ளமும், மெய்தெரியாது; மேல்-
தெளிந்தசிந்தையரும் சிறியார்க ளோடு
அளிந்தபோது,அறிதற்கு எளிது ஆவரோ ?

     பளிங்கு -பளிங்குக்கற்களை; செற்றி - ஒழுங்குபடுத்தி; குயிற்றிய -
பதிக்கப்பெற்ற; ஒளிபாய் - ஒளிபரவிய; விளிம்பும் - படிகளின்முகப்பும்;
வெள்ளமும் - அதனை அடுத்த வெள்ளமும்; மேல் - மேலாக உள்ள
தோற்றத்தில்; மெய் தெரியாது - உண்மையியல்பு அறியப்படாது; தெளிந்த
சிந்தையரும் -
தெளிவு பெற்ற உள்ளத்தினரும்; சிறியார்களோடு -
அற்பர்களோடு; அளிந்தபோது - கலந்தபோதில்; அறிதற்கு - வேறுபடுத்தி
அறிவதற்கு; எளிது ஆவரோ - சுலபமாக இருப்பார்களோ.

     பளிங்காற்செய்யப்பெற்ற படியின் விளிம்பும் அகழியில் தண்ணீரும்
மேலாக உள்ள தோற்றத்தால் வேற்றுமை தெரியாது. அற்பர்களுடன் கலந்தால்
தெளிந்த அறிஞர்களை வேறுபடுத்திக் காண்பது கடினம். பளிங்கு அறிஞர்கள்.
அகழிநீர் - அறிவற்றவர்கள். இது வேற்றுப்பொருள் வைப்பணி என்பர். (154)