4991. | கரியநாழிகை பாதியில், காலனும், வெருவி ஓடும்அரக்கர்தம் வெம்பதி ஒருவனே, ஒரு பன்னிரு யோசனைத் தெருவு மும்மை நூறாயிரம் தேடினான். |
(அனுமன்) காலனும் -யமனும்கூட;வெருவி ஓடும் - அச்சமுற்று ஓடும்படியான; அரக்கர்தம் வெம்பதி - அரக்கர்களின் கொடிய நகருள்; கரிய நாழிகை பாதியில் - இருண்ட நடுயாமத்தில்; ஒரு பன்னிரு யோசனை - பன்னிரண்டு யோசனை தூரமுள்ள; மும்மை நூறாயிரம் தெருவும் - மூன்று லட்சந் தெருக்களையும்; ஒருவனே - தான் ஒருவனாகவே; தேடினான் - (பிராட்டியைத்) தேடிச் சென்றான். அனுமன், யமனும்பயப்படும் அரக்கர் நகருள் நடுயாமத்தில் பன்னிரண்டு யோசனை தூரமுள்ள மூன்று லட்சம் தெருக்களையும் தனியாகத் தேடினான். இருண்ட இரவு - 'கரிய நாழிகை' என்று பேசப்பட்டது. 'கரியநாழிகை ஊழியின் பெரியன', என்பது பெரிய திருமொழி (திவ்ய பெரிய திருமொழி 8-56) (157) |