4996.

பண்இமைஅடைத்த, பலகள் - பொருநர் பாடல்
விண்இமைஅடைத்தென, விளைந்தது இருள்; வீணை
தண்இமைஅடைத்தன; தழங்குஇசை வழங்கும்
கண்இமைஅடைத்தன; அடைத்தன கபாடம்.

     கள் - கள்ளை அருந்தும்;பல பொருநர் - பலவிதமான கூத்தர்களின்;
பாடல் -
பாடல்கள்; பண்இமை - பண்களாகிய இமைகளை; அடைத்த -
மூடியபடி உறங்கின; வீணை - வீணைகள்; தண் - குளிர்ந்த; இமை -
இமைகளை; அடைத்தன - மூடியபடி உறங்கின; தழங்கு இசை வழங்கும் -
முழங்குகின்ற ஓசையைக் கொடுக்கும்; கண் - முரசம் முதலான கருவிகளின்
கண்கள்; அடைத்தன - மூடியபடி உறங்கின; கண் - மக்களின் கண்கள்;
இமை -
இமைகளை; அடைத்தன - மூடியபடி உறங்கின; கபாடம் -
கதவுகள்; அடைத்தன - மூடப்பெற்றன; விண் - ஆகாயமானது; இமை -
(ஒளியாகிய) இமைகளை; அடைத்தென - மூடியபடி உறங்கியது போல;
இருள் விளைந்தது -
எங்கும் இருள் பரவியது,

     பாடலும், வீணையும், மத்தளம் முதலிய கருவிகளும் கண் அடைத்து
உறங்கின. ஆகாயமும் ஒளியாகிய கண் அடைத்து உறங்கின. விண்ணுக்குச்
சூரியன், சந்திரன், நட்சத்திரம் முதலானவை கண்கள் 'பகலுக்கு ஒரு கண்.
இரவுக்கு ஆயிரம் கண்' என்பது புத்தெழுச்சிப் பாவலர் கண்டது. இருள்
பரவியது விண் இமைமூடி உறங்குவது போல் எனத் தற்குறிப்பேற்றமாயிற்று.
கண் அடைத்தன, கண் இனம் அடைத்தன இரு முறை
பிரித்துக்கூட்டப்பெற்றது. முரசு முதலியவற்றின் மண் பூசிய வட்டவுறுப்பைக்
கண் என்பர். அதற்கேற்ப உறக்கம் கூறுதல் கவிமரபு. முழவங் கண்துயிலாத
முதுநகர் என்பர் தேவர் (சிந்தா - 856)                          (162)