| 4999. | நித்தம்நியமத் தொழிலர்ஆய், நிறையும் ஞானத்து உத்தமர்உறங்கினர்கள்; யோகியர் துயின்றார்; மத்தமதவெங்களிறு உறங்கின; மயங்கும் பித்தரும்உறங்கினர்; இனிப் பிறர்இது என்னாம் ? |
நித்தம் -நாள்தோறும்; நியமத் தொழிலராய் - முறையாகச் செய்ய வேண்டிய அனுட்டானங்கள் உடையவராய் (அதனால்); நிறையும் - நிரம்பிய; ஞானத்து உத்தமர் - ஞானத்தை உடைய மேலோர்கள்; உறங்கினர் - தூங்கினார்கள்; யோகியர் - யோகவழியிலே நிற்பவர்களும்; துயின்றார் - தூங்கினார்கள்; மத்தம் - மயக்கம் தருகின்ற; மதம் - மதம் பிடித்த; வெங்களிறு - கொடிய ஆண் யானைகளும்; உறங்கின - தூங்கின; மயங்கும் - மயங்குகின்ற; பித்தரும் - பைத்தியம் பிடித்தவர்களும்; உறங்கினர் - தூங்கினார்கள்; இனி - இனிமேல்; பிறர் இது - பிறருடைய உறக்கம்; என் ஆம் - யாதாகும். உறங்கினர்கள்என்பதில் உள்ள 'கள்' அசை. பிறங்கின கெடுங்கள் (சிந்தா. 1535) (165) |