5003.

தழைந்தமொய்ஒளி பெய்ம் மணித் தாழ்தொறும்
இழைந்த நூலினும்இன்இளங் காலினும்,
நுழைந்துநொய்தினின் மெய்உற நோக்கினான் -
விழைந்தவெவ்வினை வேர்அற வீசினான்.

     விழைந்தவெவ்வினை - பொருள்களைவிரும்புவதால் உண்டான
வினைகளை;
வேர் அற - மூலம் அற்றுப்போக; வீசினான் - ஒதுக்கித்
தள்ளிய அனுமன்;(அந்த மாளிகைகளில்) தழைந்த - மிக்குள்ள; ஒளி -
பிரகாசம்; மொய் -மொய்த்துள்ள; மணி - மணிகள்; பெய் - பதிக்கப்பெற்ற;
தாழ்தொறும்-
தாழ்ப்பாள்கள் தோறும்; இழைந்த நூலினும் - இழைக்கப்
பெற்ற நூலைவிட;இன் - இனிமையான; இளங்காலினும் - தென்றலைவிட;
நொய்தினின் -
நுட்பமாக; மெய் உற - மேனி அமைய; நோக்கினான் -
பார்த்தான்.

     அனுமன்,நூலைவிடவும், தென்றலைவிடவும் நுட்பமான
மேனியைப்பெற்று தாழ்கள் தோறும் நுழைந்து பார்த்தான். தாழ் என்றது கதவுத்
துளைகளை. முத்தொள்ளாயிரம் 'கதவம் தொளை' என்று குறிப்பிடும்.  (169)