5006. | பழுதுஇல்மன்மதன் எய்கணை பல்முறை உழுதகொங்கையர், ஊசல் உயிர்ப்பினர் அழுது செய்வது என்? ஆசை அரக்கனை எழுதலாம் கொல்? என்று, எண்ணுகின்றார் சிலர். |
சிலர் - சில யட்சமகளிர்; மன்மதன் எய் - மன்மதனால் ஏவப்பெற்ற; பழுதுஇல்கணை - குறி தவறாத அம்புகளால்; பலமுறை - பலதடவை; உழுத - பிளக்கப் பெற்ற; கொங்கையர் - தனங்களை உடையவராய்; ஊசல் உயிர்ப்பினர் - தளர்ந்த உயிரையுடையவராய்; அழுது செய்வது என் - அழுதலைச் செய்வதால் யாது பயன்? ஆணை - கட்டளையிடுவதில் வல்ல; அரக்கனை - இராவணனை; எழுதல் - ஓவியத்தில் தீட்டுதல்; ஆம் கொல் - நம்மால் இயலுமா ? என்று-; எண்ணுகின்றார் - நினைக்கின்றனர். உயிர்ப்பு, மூச்சுஎன்றும் கூறலாம். சிறப்பெனிற் கொள்க. எழுதல் சித்திரம் வரைதல். (172) |