| 5009. | நக்கசெம்மணி நாறிய நாள்நிழல் பக்கம் வீசுறுபள்ளியில் பல்பகல் ஒக்க ஆசை உலக்கஉலந்தவர் செக்கர் வான்தருதிங்கள் ஒத்தார் சிலர்.* |
சிலர் - வேறு சில யட்சமகளிர்; நக்க - விளங்குகின்ற; செம்மணி நாறிய - சிவந்த மணிகள் வெளிப்படுத்திய; நாள் நிழல் - புத்தொளியானது; பக்கம் வீசுறு - பக்கங்களில் பரவப்பெற்ற; பள்ளியில் - படுக்கையில்; பல்பகல் - பலநாட்கள்; ஆசை - ஆசைகள்; ஒக்க - ஒரு சேர; உலக்க - தாக்க (அதனாலே); உலந்தவர் - தளர்ச்சியடைந்தவர்கள்; செக்கர் - சிவந்த; வான்தரு - அந்தி வானில் உதித்த; திங்கள் ஒத்தார் - சந்திரனைப் போன்றிருந்தனர். பெண் கிரகம்சந்திரன் என்று சோதிட நூல் கூறும். அதற்கேற்ப உவமை அமைந்தது. திங்கள் ஒத்தார், கீற்றுப் பிறையை ஒத்தார் என்பது பழைய உரை (அடை - பதி ) (175) |