5011.

கவ்வுதீக்கணை மேருவைக் கால்வளைந்து
எவ்வினான்மலைஏந்திய ஏந்து தோள்
வவ்வு சாந்து,தம் மாமுலை வவ்விய
செவ்வி கண்டுகுலாவுகின் றார்சிலர்.*

     சிலர் - சில யட்சமகளிர்; மேருவை - மகா மேரு மலையை; கால் -
அதன் இரண்டு கோடியையும்; வளைத்து - வளையச் செய்து; கவ்வு
தீக்கணை -
இலக்கைப் பற்றும் நெருப்பு அம்பை; எவ்வினான் - ஏவின
சிவபிரான் வீற்றிருக்கும்; மலை - கயிலாய மலையை; ஏந்திய -
அனாயாசமாக எடுத்த; ஏந்து தோள் - இராவணனின் தோள்களை; வவ்வு
சாந்து -
கவர்ந்த சந்தனத்தை; வவ்விய - கொள்ளையடித்த; தம் -
தம்முடைய; மாமுலை - பெரிய தனங்களின்; செவ்வி கண்டு -
பெருமிதத்தைப் பார்த்து; குலாவுகின்றார் - குதூகலம் அடைகின்றார்.

     சிவபிரானினும்வலிமை மிக்கவன் இராவணன். அவன் மார்புச்
சந்தனத்தை வவ்வியதால் தம் கொங்கை அவனினும் சிறப்புடையது என
யட்சமகளிர் கருதினர். செவ்வி - பெருமிதம். எவ்வுதல், ஏவுதல். 'வேறுநின்று
எவ்விடத் துணிந்து' (வாலிவதை - 10) ஏந்து தோள் - புயம் என்னும் பொருள்
தந்தது. இதனை இனியர் பெயராய் நின்றது என்பர் 'அடியளந்தான் தா அயது'
(நுண் பொருள் 6. ப)                                       (177)