5012.

கூடி நான்குஉயர்வேலையும் கோக்க நின்று
ஆடினான் புகழ்,அம்கை நரம்பினால்
நாடி, நாற்பெரும்பண்ணும் நயப்புறப்
பாடினான் புகழ்பாடுகின்றார் சிலர்.*

     சிலர் - சிலயட்ச மகளிர்; உயர் - சிறந்த; நான்கு வேலையும் -
நான்கு கடல்களும்; கூடி - சேர்ந்து; கோக்க - ஒன்றுடன் ஒன்று கலக்க;
நின்று ஆடினான் - நிலைத்து ஆடிய சிவபிரானின்; புகழ் - சிறப்புக்களை;
நாடி - விரும்பி; அம்கை நரம்பினால் - அழகிய கை நரம்பினால்; நால்
பெரும் பண்ணினால் -
நான்கு வகைப்பட்ட பண்களாலே; நயப்பு உற -
இனிமை உண்டாக; பாடினான் - பாடிய இராவணனின்; புகழ் - கீர்த்தியை;
பாடுகின்றார் - பாடுகின்றார்கள்.

     கோக்க - ஊடுருவ. நான்கு வகையான பண்கள் - குறிஞ்சிப் பண்,
முல்லைப்பண், மருதப்பண், செவ்வழிப்பண். 'பண்நான்காம் அவை பாலை,
குறிஞ்சி மருதம் செவ்வழி என்ன வழங்கும் (பொருள் - நிகண். 807)   (178)