நகைஎரிக்கற்றை நெற்றி நாவிதோய்ந் தனைய ஓதி, புகைஎனத் தும்பிசுற்ற, புதுமலர்ப்பொங்கு சேக்கை பகைஎன ஏகி,யாணர்ப் பளிங்குடைச் சீதப் பள்ளி, மிகைஒடுங் காதகாம விம்மலின், வெதும்பு வாரும்.*
நகை எரிக்கற்றை நெற்றி - விளங்கும் நெருப்புத்தொகுதி மேலாக; நாவி தோய்ந்து அனைய - (அதில்) கஸ்தூரியைப் பூசினாற் போன்ற; ஓதி- கூந்தலில்; புகை என - புகை போல; தும்பி சுற்ற - வண்டுகள் மொய்க்க;புதுமலர் - புதிய பூக்கள்; பொங்கு சேக்கை - நிரம்பிய படுக்கையை; பகைஎன ஏகி - பகை என்று கருதி விலகிச் சென்று; யாணர் - புதுமையான; பளிங்குடை - பளிங்கைப் பெற்ற; சீதப்பள்ளி - குளிர்ந்த படுக்கையில்; மிகை ஒடுங்காத - மிகுதல் குறையாத; காம விம்மலின் - காம ஏக்கத்தால்; வெதும்புவாரும் - வெப்பம் அடைபவர்களும். அரக்கியர்கூந்தல் செந்நிறமுடையதாதலின் எரிக்கற்றை நெற்றி என்றார்.செந்நிறக் கூந்தலில் உள்ள வண்டுகள் நெருப்பைச் சார்ந்த புகை போன்றுஉள்ளன. (181)