5016. | சவிபடுதகைசால் வானம் தான்ஒருமேனி ஆக, குவியும் மீன் ஆரமாக, மின்கொடிமருங்குல் ஆக, கவிர்ஒளிச்செக்கர் கற்றை ஓதியா,மழைஉண் கண்ணா அவிர்மதிநெற்றி யாக அந்திவான்ஒக்கின் றாரும்.* |
சவிபடு - ஒளி பொருந்திய;தகைசால் வானம் - சிறப்பு மிக்க ஆகாயம்; மேனி ஆக - உடலாகவும்; குவியும் மீன் - நெருங்கிய நட்சத்திரங்கள்; ஆரம் ஆக - முத்து மாலையாகவும்; மின்கொடி - மின்னற் கொடிகள்; மருங்குல் ஆக - இடையாகவும்; கவிர் ஒளிர் - முருக்கம் பூவைப் போல் ஒளி விடுகின்ற; செக்கர் - செவ்வானம்; கற்றை ஓதியா - தொகுதியுடன் கூடிய கூந்தலாகவும்; மழை - மேகமானது; உண்கண்ணா - மை பூசிய கண்களாகவும்; அவிர்மதி - பிரகாசிக்கும் பிறைச்சந்திரன்; நெற்றியாக - நெற்றியாகவும் (அமைய); அந்தி வான் ஒக்கின்றாரும் - அந்தி வானத்தை ஒத்திருப்பவர்களும். அரக்கியர்கருநிறத்தவர்கள். ஆதலின் சவிபடுவானம் என்பதற்கு ஒளியழிந்த (இருண்ட) வானம் என்று பொருள் கோடல் சிறக்கும் போலும் - ஒளி மிக்க வானம் அரக்கியர்க்கு ஒவ்வா. மதி என்றது பிறையை - பிறையை அணிந்த இறைவனை 'குளிர் மதிக் கண்ணியான்' என்றார் தேவர் (சிந்தா 208) தான் - ஓர் - உரையசை. (182) |