5017. | பானல்உண்கண்ணும் வண்ணம் படிமுறைமாற, பண்ணைச் சோனை போன்றுஅளிகள் பம்பும் சுரிகுழல்கற்றை சோர மேல்நிவந்துஎழுந்த மாட வெண்நிலாமுன்றில் நண்ணி, வானமீன் கையின்வாரி மணிக்கழங்கு ஆடு வாரும். |
மேல் நிவந்து -மேல்நோக்கி உயர்ந்து; எழுந்த - நிமிர்ந்துள்ள; மாட - மாளிகையின்; வெண் - வெண்மையான; நிலா முன்றில் - நிலாமுற்றத்தை; பண்ணை - விளையாட்டுக்கு; நண்ணி - அடைந்து; கையின் - கைகளினாலே; வான மீன் - ஆகாய நட்சத்திரங்களை; வாரி - அள்ளி எடுத்து; பனால் - நீலோற்பலம் போன்ற; உண்கண் - மை பூசிய கண்கள்; வண்ணம் - நிறமும்; படி - இயல்பும்; முறைமாற - இயல்பிலிருந்து பிறழ; சோனை போன்று அளிகள் பம்பும் - விடாப் பெருமழை போல வண்டுகள் இடையறாது மொய்க்கும்; சுரிகுழல் கற்றை சோர - சுருண்ட கூந்தல் தொகுதிகலைந்து கீழே வீழ; மணிக் கழங்கு - கழங்கு விளையாட்டை; ஆடுவாரும்- ஆடுபவர்களும். நட்சத்திரங்களின் ஒளியில் கண்களின் நிறம் பல நிறம் பெற்றன. பல பக்கம் செல்லும் கண்கள் மேலும் கீழும் செல்வதால் தம் இயல்பு திரிந்தன. கண்ணும் -உம்- அசை (திருக்குறள் 1164) பண்ணை - விளையாட்டு. கழங்கு என்றது ஆகுபெயராய் ஆட்டத்தை உணர்த்திற்று. (183) |