5019. | பன்னகஅரசர் செங்கேழ்ப் பணாமணிவலிதின் பற்றி, இன்உயிர்க்கணவன் ஈந்தான் 'ஆம்' எனஇருத்தி, விஞ்சை மன்னவர் முடியும்,பூணும் மாலையும்,பணையம் ஆக பொன்அணிபலகைச் சூது துயில்கிலர் பொருகின்றாரும். |
இன்உயிர்க்கணவன் - இனிய உயிர் போன்ற இராவணன்; பன்னக அரசர் - பாம்புகளின் தலைவனான ஆதிசேடனின்; செங்கேழ் - சிவந்த நிறம் மிக்க; பணாமணி - படத்து மணிகளை; வலிதின் பற்றி - வலிமையால் கவர்ந்து; ஈந்தான் - (எனக்குக்) கொடுத்துள்ளான்; ஆம் - எனக்கு பரிசப் பொருளாம்; என - என்று கூறி; இருத்தி - (அவற்றை) வைத்துக் கொண்டு; விஞ்சை மன்னவர் - வித்தியாதர வேந்தர்களின்; முடியும் - கிரீடங்களையும்; பூணும் - ஆபரணங்களையும்; மாலையும் - மாலைகளையும்; பணையம் ஆக - பந்தயப் பொருள்களாக வைத்து; பொன் - தங்கத்தாற் செய்யப் பெற்ற; அணி - அழகிய; பலகை - சதுரங்கப் பலகையில்; சூது - சூதாட்டப் போரை; துயில்கிலர் - உறங்காமல்; பொருகின்றாரும் - செய்கின்ற சிலரும். பன்னக அரசர் -ஆதிசேடன் முதலியவர். பணையம் - பந்தயப் பொருள். இராவணன் வழங்கிய பொருளாதலின் 'பணாமணி' பந்தயப் பொருளாக வைக்கப்படவில்லை - அரக்கியர்க்கு வித்தியாதர வேந்தர்களின் முடிமுதலானவை பணையப் பொருளாயின என்றதனால் இலங்கையின் செல்வவளம் பேசப் பெற்றது. (185) |