5022. 

தண்டலைவாழை அன்ன
     குறங்கிடை,அல்குல் தட்டில்,
கொண்டபூந்துகிலும், கோவைக்
     கலைகளும்சோர, கூர்ங்கள்
உண்டு அலமந்தகண்ணார்
     ஊசலிட்டுஉலாவு கின்ற
குண்டலம்திருவில் வீச
     குரவையில்குழறு வாரும்.

     கூர்ங்கள் உண்டு- மயக்கம் மிக்க கள்ளை உண்டு; அலமந்த
கண்ணார் -
சுழலும் கண்களை யுடையவர்கள்; தண்டலை - தோட்டத்தில்
உள்ள; வாழை அன்ன - வாழை போன்ற; குறங்கிடை - தொடைகளில்;
அல்குல் தட்டில் - தேர்த்தட்டுப் போன்ற அல்குலில்; கொண்ட - உடுத்த;
பூந்துகிலும் - பூத்தொழிலையுடைய சேலையும்; கோவைக் கலைகளும் -
கோக்கப் பெற்ற இடையணிகளும்; சோர - சரிந்து நீங்கவும்; ஊசலிட்டு -
ஊசலின் தன்மை பெற்று; உலாவுகின்ற - அசைகின்ற; குண்டலம் -
குண்டலமானது; திருவில் வீச - வானவில்லின்
 ஒளியை வெளிப்படுத்த;
குரவையில் -
குரவைக் கூத்தாடுவதில் (இலயம்); குழறுவாரும் -
தடுமாறுபவர்களும்.

     மயக்கம் தரும்கள்ளையுண்டு, சேலையும், இடையணியும் சோர,
குண்டலம் அசைய ஆடும் குரவையாட்டத்தில் இலயம் தடுமாறுபவர்களும். 186
ஆம் பாடல் காதலால் நிலைகுலைந்தும் முறை தவறாது பாடும் அரக்கியரைக்
காட்டினார் கவிஞர். இங்கு கள்ளுண்டமையால் குரவையில் இலயம்
தவறியவர்களை அறிமுகப் படுத்துகிறார். தண்டலை - தோட்டம். பூந்திரள்
தண்டலை என்னும் மதுரைக்காஞ்சித்  (47) தொடர்க்கு இனியர்
'பூத்திரளையுடைய பூந்தோட்டங்கள்' என்று உரை வகுத்தார். பூந்துகில் -
பூத்தொழிலை உடைய சேலை. பூந்துகில் மரீஇய ஏந்து கோட்டல்குல் (நெடுநல்
145) குரவை - குரவைக் கூத்து. திருவில் - வானவில். குண்டலம் திருவில் வீச
(சிந்தா 677)                                               (188)