5023.

நச்சுஎனக்கொடிய நாகக்
     கள்ளொடுகுருதி நக்கி
பிச்சரின்பிதற்றி அல்குல்
     பூந்துகில்கலாபம் பீறி
குச்சரித்திறத்தின் ஓசை
     களம்கொள,குழுக்கொண்டு ஈண்டி
சச்சரிப் பாணிகொட்டி
     நிறைதடுமாறு வாரும்.

     நாகநச்சு என -பாம்பின்விடமென்று கூறத் தக்க; கொடிய -
கொடுமையான; கள்ளொடு குருதி நக்கி - கள்ளையும் குருதியையும் உண்டு;
பிச்சரின் பிதற்றி - பித்தர்களைப் போலக் குழறிப் பேசி; அல்குல் பூந்துகில்- அரையிற் கட்டிய ஆடையையும்; கலாபம் - மேகலையையும்;
பீறி -சிதைத்து; குச்சரி - குச்சரி என்று கூறப்பெறும்; திறத்தின் ஓசை -
திறப்பண்ணின் ஓசையானது; களம் கொள - மிடற்றை இடமாகக் கொள்ள;
குழூஉக் கொண்டு - கூட்டமாகச் சேர்ந்து; ஈண்டி - ஒன்றுபட்டு; சச்சரி -
சச்சரி  என்னும் வாத்தியத்தில்; பாணி கொட்டி -  தாளத்தை வரையறுத்து;
நிறை தடுமாறு வாரும் -
மனத்தை  நிறுத்த  முடியாமல்  குலைபவர்களும்.

     கள்ளைப்பாம்பின் விடமென்றார் - பாம்பு வெகுண்டன்ன தேறல்.
என்றும் (சிறுபாண் - 237) பாம்புக் கடுப்பன்ன தோப்பி என்றும் (அகம் 348)
சங்க இலக்கியம் பேசும். குச்சரி - கிளைப்பண்.
 பெரும்பண்ணிற்கிளைப்பண்
திறம் - குச்சரி ஐந்தாம் சாமத்தில் பாடப் பெறும். குச்சரி மல்லரி .... அஞ்சாம்
சாமத்தில் பாட என்று பஞ்ச மரபு பேசும் சச்சரி - ஒரு வகை வாத்தியம்.
கொக்கரை சச்சரி வீணை (71) பாணியாணை (அப்பர் 288 - 7) பாணி
கொட்டுதல், தாளத்தை வரையறுத்தல். மறக்க உண்ட மதுவும் பிறவும்
பயன்படாமையால் காதல் நினைவால் தடுமாறினர்.                (189)