5027. | புரியும் நல்நெறி முனிவரும், புலவரும் புகல் இலாப் பொறைகூர எரியும்வெம்சினத்து இகல்அடு கொடுந்திறல் இராவணற்குஎஞ்ஞான்றும் பரியும்நெஞ்சினர் இவர்' என வயிர்த்து ஒரு பகைகொடுபனித்திங்கள் சொரியும்வெங்கதிர் துணைமுலைக் குவைசுட, கொடிகளின்துடிக்கின்றார். |
புரியும் -யாவரையும்விரும்புகின்ற; நல்நெறி - நல்வழியில் செல்கின்ற;முனிவரும் - தவசிகளும்; புலவரும் - தேவர்களும்; புகல் இலா -பாதுகாப்பைப் பெறாமையாலே; பொறை கூர - பொறுமை அதிகரித்தும் (கருணையின்றி); எரியும் - எரிகின்ற; வெம்சினத்து - கொடிய கோபத்தால்; இகல் அடு - பகைமை அழிக்கின்ற; கொடுந்திறல் இராவணற்கு - மிக்க வலிமையுடைய இராவணனிடத்தில்; எஞ்ஞான்றும் - எந்தக் காலத்திலும்; பரியும் - அன்பு கொள்கின்ற; நெஞ்சினர் - உள்ளத்தை உடையவர்; இவர் -இந்த வித்தியாதர மகளிர்; என - என்று கருதி (அதனால்); வயிர்த்து - கோபம் கொண்டு; ஒரு பகை கொடு - ஒரு பகையை மனத்தில் வைத்து; பனித்திங்கள் - குளிர்ந்த சந்திரனானவன்; சொரியும் வெம் கதிர் - கொட்டுகின்ற கொடிய கிரணங்கள்; துணை - இரண்டு; குவை முலை சுட -குவிந்த தனங்களைச் சுட (அதனால்); கொடிகளில் - பூங்கொடிகளைப் போல;துடிக்கின்றார் - நடுங்குகின்றார்கள். புகல் - பற்றுக்கோடு, பாதுகாப்பு. (காப்பவர்) புகல் இலா - என்பதற்குக் கூறவியலாத என்றும் கூறலாம். இந்தக் கவியில் எல்லார்க்கும் பகையான இராவணனிடத்தி்லே விருப்பமாயிருக்கலாமோ என்று சந்திரன் வாட்டுவதொத்தது' என்பது பழையவுரை - (அடை - பதி) கோபம் 'நெடும்பகையால் எரியும் வெம்சினம்' என்று கூறப்பெற்றது. 'சேர்ந்தாரைக் கொல்லி' என்று தமிழ் வேதம் பேசும். துணை - இரண்டு. துணை முலை சாந்து கொண்டு அணியாள் (பெரியதிரு 2 - 7 -2 இத்தொடரை, 'பெரிய வாச்சான் பிள்ளை' புறம்பு உவமானமின்றி தன்னில்தான் ஒப்பாகச் சொல்ல வேண்டும்படி இருக்கிற முலைகள்' என்று விளக்கினார். (193) |