| 5028. | சிறுகுகாலங்கள் ஊழிகள் ஆம்வகை திரிந்து,சிந்தனை சிந்த, முறுகு காதலின்வேதனை உழப்பவர், முயங்கியமுலை முன்றில் இறுகு சாந்தமும்,எழுதிய குறிகளும் இன்உயிர்ப் பொறை ஈர, மறுகு வாட்கண்கள்சிவப்புற நோக்கினர்; வயிர்த்தனர்; உயிர்க்கின்றார். |
சிறுகு காலங்கள் -மிகச்சிறிய நாழிகை முதலான காலங்கள்; ஊழிகள் ஆம்வகை - பலயுகங்கள் ஆகும்படியாக; சிந்தனை - மனமானது; திரிந்து சிந்த- வேறுபட்டுச் சிதறிப் போக; முறுகு காதலின் - முற்றிய காமத்தாலே; வேதனை உழப்பவர் - துன்பத்தால் வருந்தி; முயங்கிய - இராவணன். தழுவிய; முலைமுன்றில் - முலைத் தடத்திலே (அவன் பூசிய); இறகு சாந்தமும் - உலர்ந்த சந்தனமும் (அவனால்); எழுதிய - எழுதப்பெற்ற; குறிகளும் - கரும்பு முதலிய சித்திரங்களும்; இன் - இனிமையான; உயிர்ப்பொறை - உயிராகிய பாரத்தை; ஈர - அறுக்க; மறுகு - கலங்குகின்ற; வாட்கண்கள் - வாள் போன்ற கண்களானது; சிவப்புற - செந்நிறம் அடைய; நோக்கினர் வயிர்த்தனர் - (இராவணன் வருகையை) பார்த்து சினம் கொண்டு; உயிர்க்கின்றார் - பெருமூச்சு விடுகின்றனர். சிறு காலங்கள்,நொடி, இமை, முதலியவை. முலைமுன்றில் - மார்பு. இளங்கோ அடிகள் 'கொங்கை முன்றில் குங்குமம் எழுதாள்' என்பர். முலை முதல் முற்றம் என்னும் சிந்தாமணித் தொடருக்கு (25-39) முலை தோன்றுவதற்குக் காரணமாகிய மார்பு என்று இனியர்; விளக்கம் வரைந்தார். நோக்கியதால் கண்கள் சிவந்தன - உயிர்ப்பொறை - உயிராகிய பாரம். பண்புத் தொகை. அதற்கு உடல் என்றும் கூறலாம். முலை முன்றில் இறுகும் சாந்தம் இராவணனுடனே கூடின காலம் அவன் மார்பில் சந்தனங்கள் முலை மத்தியிலே கி்டக்கக் கண்டு என்பது பழைய உரை. (அடை - பதி) வயிர்த்தது - காலம் தாழ்த்தியமை பற்றி. (194) |