5030.

கண்டு,கண்ணொடும் கருத்தொடும் கடாவினன்,
     காரணம்கடைநின்றது
உண்டு வேறுஒருசிறப்பு; எங்கள் நாயகற்கு
     உயிரினும்இனியாளைக்
கொண்டுபோந்தவன் வைத்தது ஓர் உறையுள் கொல்?
     குலமணிமனைக்கு எல்லாம்
விண்டுவின்தடமார்பினின் மணி ஒத்தது
     'இது' எனவியப்புற்றான்.

(அனுமன்)

     கண் - (மாடத்தைப்) பார்த்து; கண்ணொடும் - கண்களையும்;
கருத்தொடும் -
அறிவையும்; கடாவினான் - புகுத்தினான் (பிறகு); காரணம்
-
யான் தேடிவந்த காரணம்; கடை நின்றது - இறுதிப் பகுதியில் உள்ளது;
வேறு ஒரு சிறப்பு -
மற்ற மாளிகையினும் வேறுபட்ட தனிச்சிறப்பு; உண்டு -
(இம்மாளிகைக்கு) இருக்கிறது; எங்கள் நாயகற்கு - எங்கள் தலைவனாகிய
இராமபிரானுக்கு; உயிரினும் இனியாளை -  உயிரைவிட இனிமை மிக்க
பிராட்டியை; கொண்டு போந்தவன் - கொண்டு வந்த இராவணன்; வைத்தது
-
வைத்துள்ள; ஓர் உறையுள் கொல் -  ஒரு மாளிகையோ (இம்மாடம்); இது
-
இந்த மாளிகை; குலமணி - சிறந்த மணிகள் பதிக்கப்பெற்ற;
மனைக்கெல்லாம் -
 மாளிகை யாவற்றுக்கும்; விண்டுவின் - திருமாலின்;
தடமார்பினில் -
பெரிய மார்பில் (உள்ள);  மணி ஒத்தது - கௌத்துவ
மணியை ஒத்துள்ளது; என - என்று நினைந்து; வியப்புற்றான் -
அதிசயப்பட்டான்.

     ஓடு என்னும்மூன்றன் உருபை 'உம்' என்று மாற்றுக. 'தவத்தொடு
தானம் செய்வாரில் தலை' இங்கு தவமும் தானமும் எனப் பொருள்
கூறப்பெற்றது. 'ஒடு' என்பதை ஆலாக்குவதும் உண்டு. 'ஒடு' உருபாக்கி
கண்ணாலும், கருத்தாலும் ஆராய்ந்து என்றும் பொருள் கூறலாம். கண்ணொடு
கடவுளைக் கண்டாயே' என்னும் மருதக் கலிக்கு (28) கண்ணால் கடவுளரைக்
கண்டாயோ என்று இனியர் உரை வகுத்தார்.                      (196)