5034.

எற்புவான்தொடர் யாக்கையால் பெறும்பயன்
     இழந்தனள்! இதுநிற்க;
அற்பு வான்தளைஇற்பிறப்பு அதனொடும்
     இகந்துதன்அருந் தெய்வக்
கற்பு நீங்கியகனங்குழை இவள்எனின்,
     காகுத்தன்புகழோடும்
பொற்பும் யானும்இவ் இலங்கையும் அரக்கரும்
     பொன்றுதும்இன்று என்றான்.

     ஏற்பு - எலும்புகளின்; தொடர் - கட்டினால் அமைந்த; வான்
ஆக்கையால் -
சிறந்த உடம்பினால்; பெறும் - அடைய வேண்டிய; பயன் -
பயனை; இழந்தனள் - இழந்துவிட்டாள்; இது நிற்க - இது கிடக்கட்டும்;
இவள் - இங்கே துயிலும் இப்பெண்; வான் - சிறந்த; அற்புத் தளை -
அன்பாகிய பிணிப்பை; இற்பிறப்பு அதனொடும் - குடிப் பிறப்போடு சேர்த்து;இகந்து - நீக்கி; தன் - தனக்கே உரிய;
அரும் தெய்வக்
கற்புநீங்கிய -
அரிய தெய்வத்தன்மைவாய்ந்த கற்பை விட்டு விலகிய;
கனங்குழை -
பாரமான குழையணிந்தவள் (சீதை); எனின் - என்று உறுதிப்
பட்டால்; காகுத்தன் புகழொடும் - இராமபிரானின் புகழும்; பொற்பும் -
பொலிவும்; யானும் - நானும்; இவ் இலங்கையும் - இந்த இலங்கை
மாநகரும்; அரக்கரும் - இராக்கதர்களும்; இன்று - இன்றைய தினத்தில்;
பொன்றுதும் - அழிவோம்; என்றான் - என்று கருதினான்;

     எற்பு - என்பு.நிற்க - கிடக்கட்டும். அலட்சியத்தைக் காட்டும் சொல்.
அது கிடக்கட்டும் என்றான் அனுமன். பொற்பு - பொலிவு. பொன்றுவது இ்ன்று
என்றான் - என்னும் பாடம் உள்ளது. பொன்றுவது - அழிதல். தொழிற்பெயர்.
                                                     (200)