5037.

என்றுஉணர்ந்து நின்று ஏமுறும் நிலையினில்
     'நிற்க இத்திறன்' என்னா
பின்றுசிந்தையன் பெயர்ந்தனன்; அம்மனை
     பிற்படப்பெருமேருக்
குன்று குன்றியதகைஉற ஓங்கிய
     கொற்றமாளிகை தன்னில்
சென்று புக்கனன்; இராவணன் எடுப்பருங்
     கிரியெனத்திரள் தோளான்.

     இராவணன்எடுப்பரும் - இராவணனால்பெயர்த்தெடுக்க முடியாத;
கிரிஎன  -
மலைபோல; திரள் தோளான் - திரண்ட தோள்களையுடைய
அனுமன்; என்று உணர்ந்து - என்று அறிந்து; நின்று - நிலைபெற்று; ஏம்
உறு நிலையினில் -
இன்பம் பொருந்திய நிலைமையில்; இத்திறன் நிற்க -
ஆராயும் இத்தன்மை இருக்கட்டும்; என்னா - என்று கருதி; பின்று -
திரும்பிய; சிந்தையன் - மனத்தை உடையவனாய்; அம்மனை - அந்த
மண்டோதரியின் மாளிகை; பிற்பட -  பின்னே செல்ல; பெயர்ந்தனன் -
நீங்கிப்போய்; பெருமேருக்குன்று - பெரிய மேருமலை; குன்றிய தகைஉற -
தாழ்ந்த தன்மையடைய; ஓங்கிய - உயர்ந்துள்ள; கொற்ற மாளிகை தன்னில்
-
வெற்றி பொருந்திய மாளிகையில்; சென்று புக்கனன் - சென்று சேர்ந்தான்.

     ஏம் - இன்பம்.பின்று சிந்தை - மீண்ட சிந்தனை. குன்றிய தகை -
தாழ்ந்த தன்மை.                                        (203)