5038.

நிலம்துடித்தன; நெடுவரை துடித்தன;
     நிருதர்தம்குலமாதர்
பொலம் துடிக்குஅமை மருங்குல்போல் கண்களும்
     புருவமும்,பொன் - தோளும்
வலம் துடித்தன;மாதிரம் துடித்தன;
     தடித்துஇன்றி, நெடுவானம்
கலந்து இடித்தன;வெடித்தன பூரண
     மங்கலகலசங்கள்.

(அனுமன் அம்மாளிகையில் நுழைந்தபோது)

     நிலம் - இலங்கையில் பலஇடங்கள்; துடித்தன - அதிர்ந்தன;
நெடுவரை -
 பெரிய மலைகள்; துடித்தன - அதிர்ந்தன; நிருதர்தம்
குலமாதர் -
அரக்கர்குலப் பெண்களின்; பொலந்துடிக்கு - அழகிய துடிக்கு;
அமை -
உவமையாகத்தக்க; மருங்குல்போல் - இடையைப்போல;
கண்களும் -
கண்களும்; புருவமும் - புருவங்களும்; பொன் தோளும் -
அழகிய தோள்களும்; வலம் துடித்தன - வலப்பக்கத்தில் துடித்தன; மாதிரம்
-
திசைகள்; துடித்தன -  அதிர்ந்தன; தடித்து இன்றி - மின்னல்
இல்லாமலேயே;
நெடுவானம் - நீண்ட மேகஆகாயம்; கலந்து - (ஒலி எல்லா
இடத்திலும்) கலப்ப; இடித்தன - அதிர்ந்தன; பூரண மங்கல கலசங்கள் -
நீர் நிரம்பிய மங்கல கலசங்கள்; வெடித்தன - சிதறின.

     அமை -உவமையாகத்தக்க. கலந்து என்றும் செய்து என்றும் செய என்
எச்சமாக மாற்றுக.

     இடையைப்போல்கண் முதலானவை துடித்தன. இடையானது மெல்லியது
ஆகையால் எப்போதும் துடிக்கும். அதுபோல் மற்றைய அங்கங்கள் துடித்தன.
மகளிர்க்கு வலப்புறம் துடித்தல் கேட்டுக்கு அறிகுறி   (கம்ப. 5100).   (204)