5039. | புக்குநின்று, தன்புலன் கொடு நோக்கினன் பொருவருந் திருவுள்ளம் நெக்குநின்றனன், நீங்கும் அந்தோ இந்த நெடுநகர்த்திரு என்னா, எக்குலங்களின்யாவரே யாயினும் இருவினை எல்லார்க்கும் ஒக்கும்; ஊழ்முறைஅல்லது, வலியது ஒன்று இல் என,உணர்வுற்றான்.் |
(அனுமன்) புக்குநின்று -போய்நின்று; தன் - தன்னுடைய; புலன்கொடு - அறிவைக்கொண்டு; நோக்கினன் - பார்த்து; இந்த நெடுநகர்த்திரு - இந்த பெரிய நகரின் செல்வம்; நீங்கும் - அழியும்; அந்தோ - ஐயோ !; என்னா-என்று கருதி; பொரு அரு - ஒப்புமை இல்லாத; திருவுள்ளம் - நன்மனம்; நெக்கு நின்றனன் - நெகிழ்ந்து நின்றான்; எக்குலங்களின் - எந்தக் குலத்தினில் (தோன்றிய); யாவரேயாயினும் - எவராக இருந்தாலும்; எல்லோர்க்கும் - யாவருக்கும்; இருவினை - நல்வினை தீவினைகள்; ஒக்கும்- ஒரு மாதிரியே ஆகும்; ஊழ் - ஊழ் வினையின்; முறையல்லது - நியதியைத் தவிர; வலியது - வலிமையுடையது; ஒன்று - வேறொரு பொருள்; இல் என - இல்லை என்று; உணர்வுற்றான் - சிந்தித்தான். அனுமன்,இலங்கையில் நிகழ்ந்த நிலன்துடித்தல் முதலிய உற்பாதங்களைக் கண்டு இந்நகரின் நிலைமை அறிந்து வருந்தினான். 'ஊழிற் பெருவலியாவுள' என்னும் தமிழ்மறை (குறள் 380) அனுமன் மூலம் வெளிப்படுகிறது. பிறர்கேட்டைநினைந்து வருந்தினான் ஆதலின் பொருவறு திருவுள்ளம் என்றான். (205) |