இராவணன் நிலையும்அனுமன் நினைவும்

5040.

நூல்பெருங்கடல் நுணங்கிய கேள்வியன்
    நோக்கினன்; மறம் கூரும்
வேல் பெருங்கடல்புடைபரந்து ஈண்டிய
     வெள்ளிடைவியன்கோயில்
பால் பெருங்கடல்பல்மணிப் பல்தலைப்
     பாப்புடைப் படர்வேலை
மால் பெருங்கடல்வதிந்ததே அனையது ஓர்
     வனப்பினன்துயில்வானை

     பெருங்கடல் நூல்- பெருங்கடல் போன்ற நூல் அறிவையும்;
நுணங்கிய - நுட்பமான; கேள்வியன் - கேள்வி அறிவையும் உடைய
அனுமன்; மறம்கூரும் - வீரம் நிரம்பிய; பெரும் - பெரிய; வேல் கடல் -
வேலேந்திய வீரர்கள் திரள்; புடை - பக்கங்களில்; பரந்து ஈண்டிய - பரவி
நெருங்கியுள்ள; வெள்ளிடை - வெளி முற்றங்களையுடைய; வியன்கோயில் -
பெரிய அரண்மனையில்; பெரும் - பெரிய; பாற்கடல் - பாற்கடலின்
கண்ணே; பல்மணி - பல மணிகளையும்; பல்தலை - பல தலைகளையும்
உடைய; பாப்பு - ஆதிசேடனை; உடை - உடைய; படர்வேலை - விரிகின்ற
அலைகளையுடைய கடலிலே; மால் - திருமாலாகிய; பெருங்கடல் - பெரிய
கடல்; வதிந்தது அனையது - தங்கியிருப்பது போன்ற; வனப்பினன் -
அழகையுடையவனாய்; துயில்வானை - உறங்குகின்றவனை (இராவணனை);
நோக்கினன் - பார்த்தான்.

     வேலை - அலை.புலர்கின்ற வேலைப் புணரி (திருவிருத்தம் 75)
பெரியவாச்சான் பிள்ளை, திரைக்கிளர்ச்சியை உடைய கடல் என்று உரை
வகுத்தார். வேலை - கரை என்றும் கொள்ளலாம். கடலின் கரையும் வேலை
என்றாகும் (பிங்கலம் - 4111).

       வெள்ளிடை -அரண்மனையின் முற்றம்.                (206)