5041. | குழவிஞாயிறு குன்று இவர்ந்தனையன குருமணிநெடுமோலி இழைக ளோடுநின்று இளவெயில் எறித்திட, இரவெனும்பொருள் வீய, முழைகொள்மேருவின் முகட்டிடைக் கனகனை முருக்கியமுரண்சீயம், தழைகொள்தோளொடு தலைபல பரப்பி, முன் துயில்வது ஓர் தகையானை- |
குன்றுஇவர்ந்தனையன - மலையின்கண் ஏறிய; குழவி ஞாயிறு அனைய - இளஞ்சூரியன் போன்ற; குருமணி - ஒளிமிக்க மணிகள் பதிக்கப்பெற்ற; நெடுமோலி - நீண்ட கிரீடங்கள்; இழைகளோடு நின்று - ஆபரணங்களுடன் நிலைத்து; இளவெயில் - மெல்லிய ஒளி; எறித்திட - வீசவும்; இரவெனும் - இருள் என்று பேசப்படும்; பொருள் வீய - பொருள் அழியவும்; முழைகொள் - குகைகளைப் பெற்ற; மேருவின் முகட்டிடை - மேருமலையின் உச்சியில்; கனகனை முருக்கிய - இரணியனைக் கொன்ற; முரண்சீயம் - வலிமைபெற்ற நரசிங்கமூர்த்தி; தழைகொள் - (பலவாக) தழைத்தலைக் கொண்ட; தோளொடு - தோள்களையும்; தலை பல - பல தலைகளையும்; பரப்பி - பரப்பிக்கொண்டு; முன் துயில்வது - முன்னே உறங்குவதைப் போன்ற; ஓர் - ஒப்பற்ற; தகையானை - தன்மை உடையவனை (இராவணனை). நரசிம்மமூர்த்திமலையின் குகையில் இருப்பதாக உபநிடதம் (நரசிம்ம உபநிடதம் 409) பேசும். அது இங்கு நினைவுக்கு வருகிறது. முழையில் இருந்த சிங்கம் முகட்டில் வந்து இரணியனைக் கொன்றது போலும். (207) |