5043.

குழந்தைவெண்மதிக் குடுமியன் நெடுவரை
     குலுக்கியகுலத்தோளைக்
கழிந்து புக்குஇடை கரந்தன, அனங்கன்வெங்
     கடுங்கணைபலபாய,
உழந்தவெஞ்சமத்து உயர்திசை யானையின்
     ஒளி மருப்புஇற்று, உற்ற
பழுந்தழும்பினுக்குஇடைஇடையே சில
    பசும்புண்கள் அசும்பு ஊற,

     வெண் - வெண்மையான;குழந்தைமதி - இளஞ்சந்திரனை அணிந்த;
குடுமியன் -
சடையுச்சியுடைய சிவபிரான் வீற்றிருக்கும்; நெடுவரை - பெரிய
கயிலாய மலையை; குலுக்கிய - அசைத்தெடுத்த; குலத்தோளை - கூட்டமான
தோள்களை; கழிந்து - கடந்து (மார்பில்); புக்கு - புகுந்து; இடைகரந்தன -
நடுவில் மறைந்துள்ள; அனங்கன் பலவெங்கடுங்கணை - மன்மதனின் பல
கொடிய அம்புகள்; பாய - பாய்தலாலே; வெம்சமத்து - கொடிய போரிலே;
உழந்த -
வருந்திய; திசையானையின் - திக்குகளில் உள்ள யானையின்;
உயர் -
உயர்ந்த; ஒளி மருப்பு - ஒளிமிக்க
 தந்தங்கள்; உற்ற- பதிந்த;
இற்று -
முறிந்ததால் உண்டான; பழந்தழும்பினுக்கு - பழைய
தழும்புகளுக்கு; இடை இடையே - நடு நடுவே; சில பசும்புண்கள் - சில
புதிய புண்கள்; அசும்பு ஊற - குருதி கசிந்து கொண்டிருக்க.

     யானைகளால்உண்டான பழம் புண்களுக்கிடையே மன்மத பானங்களால்
உண்டான புதுப்புண்கள் குருதி கசிய. கடுங்கணை பாய உண்டான புதுப்புண்
என்க. தழாத்தொடர் குழவித்திங்கள் .... முடித்த அருமைத்து எனச் சிலம்பு
பேசிற்று. அதை அடியொற்றி குழந்தை வெண்மதி என்று கூறப்பெற்றது.
தழும்பினுக்கிடையே கருங்கணை பாய (உண்டான) புதுப்புண் என்று
சொற்களைப் பிரித்துக் கூட்டினும் அமையும்.                    (209)