5044.

சாந்துஅளாவிய கலவைமேல் தவழ்வுறு
     தண்தமிழ்ப் பசுந்தென்றல்,
ஏந்து காமவெங்கனல் உயிர்த்து, இருமடி
    துருத்தியின் உயிர்ப்பு ஏற
காந்தள்மெல்விரல் சனகிமேல் மனம்முதல்
     கரணங்கள்கடிது ஓடப்
பாந்தள்நீங்கிய முழைஎன, குழைவுறு
     நெஞ்சுபாழ்பட் டானை--

     கலவை அளாவிய -கற்பூரம்முதலான கலவைகளைப் பெற்ற;
சாந்துமேல் -
சந்தனப் பூச்சின்மேல்; தவழ்வுறு - தவழ்கின்ற; தண்டமிழ் -
குளிர்ந்த தமிழ் மொழியினுடன் பிறந்த; பசுந்தென்றல் - இளந்தென்றல்
காற்றால்; காந்து - சுடுகின்ற; வெம் - கொடுமையான; காம கனல் -
காமமாகிய நெருப்பு; உயிர்த்து - வெளிப்பட்டு (அதனால்); இருமடி -
இரண்ட மடங்கு; துருத்தியின் - துருத்தியைப்போல; உயிர்ப்பு - பெருமூச்சு;
ஏற -
அதிகரிக்க; காந்தள் மெல்விரல் - காந்தள் மலரைப் போன்ற
மெல்லிய விரலைப்பெற்ற; சனகிமேல் - சீதாப் பிராட்டியின்பால்; மனம்
முதல் கரணங்கள் -
மனம் முதலான கரணங்கள்; கடிது ஓட -  வேகமாகச்
சென்று சேர (அதனால்);பாந்தள் நீங்கிய - பாம்புகள் நீங்கப்பெற்ற; முழை
என -
புற்றைப்போல; குழைவுறு - நெகிழ்ந்த; நெஞ்சு - இதயம்;
பாழ்பட்டானை-
சூனியம்பட்டவனை (இராவணனை).

     தென்றலுடன்தமிழ் பிறந்தது என்பது இலக்கிய வழக்கு. 'மறம் பயின்றது
எங்கோ தமி்ழ் மாருதம்' என்பர் தொண்டர் சீர் பரவுவார்
(பெரிய தடுத்தாட் -
167). குமரகுருபரர், 'தென்னந்தமிழினுடன் பிறந்த சிறுகால்' என்பர் (மீனாட்சி -
தால் - 1)

     இராவணனின்அந்தக் கரணங்கள் பாம்பு போன்றவை. அவன் இதயம்
புற்றையொப்பது. ஏந்துகாமவெங்கனலினுக்கு உமிழ் அதள் துருத்தியின்
உயிர்ப்பேற -எனப்பாடங்கொண்டு, இராவணன் கொண்டுள்ள காமமாகிய
கொடியநெருப்புக்கு புகுத்துகிற தோல்துருத்தியின் காற்றாக ஏற எனப்பொருள்
உரைப்பர். அவர் துருத்தியின் காற்றாக ஏறுவது தென்றல் என்பர். தென்றல்,
துருத்தியின் உயிர்ப்பு ஏற, என முடிப்பர்.

    அதள்துருத்தி -தோல்துருத்தி.                              (210)