அறுசீர் விருத்தம்

5045.

கொண்டபேர் ஊக்கம் மூள
     திசைதொறும் குறித்து மேல்நாள்
மண்டிய செருவில்,மானத்
    தோள்களால் வாரி வாரி
உண்டதுதெவிட்டிப் பேழ்வாய்க்
     கடைகள்தோறு ஒழுகிப் பாயும்
அண்டர்தம்புகழின் தோன்றும்
    வெள்எயிற்று அமைதி யானை-*

     மேல்நாள் -முற்காலத்தில்; கொண்ட பேர் ஊக்கம் மூள -
மேற்கொண்ட பெரிய கிளர்ச்சி பெருக; திசைதொறும் - திக்குகள் தோறும்;
குறித்து - பகைவர்களை வெல்ல எண்ணி; மண்டிய செருவில் - நெருங்கிய
போரில்; மானத்தோள்களால் - மானமுடைய கைகளால்; வாரி வாரி -
எடுத்தெடுத்து; உண்டது - உட்கொண்டது; தெவிட்டி - தேக்கிட்டு; பேழ் -
பெரிய; கடைவாய்கள் தோறும் - கடைவாய்கள் தோறும்; ஒழுகிப்பாயும் -
ஒழுகி வழிகின்ற; அண்டர்தம் புகழின் - தேவர்களின் புகழைப்போல;
தோன்றும் - காணப்படும்; வெள்எயிறு - வெண்மையான (கோரை) பற்களின்;அமைதியானை - தோற்றத்தை உடையவனை (இராவணனை).

     தோள் - கை.தோள் உற்று ஓர் தெய்வம் (சிந்தாமணி 10 நச்)
தெவிட்டுதல் - உண்டது வெளிப்படல். எனக்குத் தெவிட்டி விடுகின்றேனோ
என்றபடி (திருவாய் 6-5-5 நம்பிள்ளை) புகழ்வெண்ணிறமாய்ப் பேசப்படும்.

     இவ்விருத்தம்மூன்றும் ஆறும் காய்ச்சீர்கள்; மற்றைய நான்கும்
மாச்சீர்கள். இந்நூலில் இத்தகைய பாடல்கள் 110. (மணிமலர் 76)      (211)