| 5050. | தழுவாநின்ற கருங்கடல் மீது உதயகிரியில் சுடர்தயங்க எழுவான் என்ன,மின் இமைக்கும் ஆரம்புரளும் இயல்பிற்றாய், முழு வானவர்ஆய்உலகம் ஒரு மூன்றும்காக்கும் முதல் தேவர், மழு, வாள்,நேமி, குலிசத்தின் வாய்மைதுடைத்த மார்பானை- |
தழுவாநின்ற -(தன்னைச்) சார்ந்துள்ள; கருங்கடல்மீது - கருமையான கடலின் மேலே (உள்ள); உதயகிரியில் - உதயமலையின் கண்ணே; சுடர்தயங்க - ஒளி விளங்க; எழுவான் என்ன - தோன்றும் சூரியனைப்போல; மின் இமைக்கும் - ஒளியைப் பரப்பும்; ஆரம் புரளும் - மணிமாலைகள் புரள்கின்ற; இயல்பிற்றாய் - தன்மை உடையதாய்; முழு வானவராய் - பூரணத்துவம் பெற்ற விண்ணவராய்; உலகம் ஒரு மூன்றும் - ஒப்பற்ற மூன்று உலகத்தையும்; காக்கும் - பாதுகாக்கும்; முதல் தேவர் - தலைமைத் தேவர்களின் (ஏவிய); மழுவாள் நேமிகுலிசத்தின் - மழுப்படை, சக்கரம், வச்சிராயுதம் என்னும் ஆயுதங்களின்; வாய்மை - தப்பாத ஆற்றலை; துடைத்த - இல்லையாக்கின; மார்பானை - மார்பையுடையவனை (இராவணனை). சூரியனைப்போன்ற ஆரங்கள். மழுவாள் - மழுப்படை. 'மழுவாள் நெடியோன்' (மதுரைக் - 455) வாய்மை - தப்பாமை - வலம்படு வாய்வாள் ஏந்தி (புறம் 91 -உரை). வாய்மை என்பதற்கு வலிமை என்றும் பொருள் கூறலாம். முடலைகொள் வாய்மை ... துப்பு. (சூடா - நிக - பண்பு 28) (216) |