5052. | கண்டனன்;காண்ட லோடும் கருத்தின்முன் காலச் செந்தீ விண்டன கண்கள்;கீண்டு வெடித்தன;கீழும் மேலும்;- கொண்டது ஓர்உருவம் மாயோன் குறளினும்குறுக நின்றான்- திண்தலைபத்தும், தோள்கள் இருபதும்தெரிய நோக்கி, |
மாயோன் -திருமால்;கொண்டது - (விரும்பி) ஏற்றுக் கொண்ட; உருவம் குறளினும் - அழகிய வாமன வடிவத்தைவிட; குறுகி நின்றான் - சுருங்கி இருந்த அனுமன்; திண் - வன்மைமிக்க; பத்துத் தலையும் - பத்து தலைகளும்; இருபது தோள்களும் - இருபது கைகளும்; தெரிய - தெரியும்படியாக; நோக்கிக் கண்டனன் - உற்றுப் பார்த்தான் (அப்போது); காண்டலும் கருத்தின் முன் - கண்ட அளவிலே (இவன் இராவணன்) என்றுநினைவதன்முன்; கண்கள் - (அனுமனின்) கண்களிலிருந்து; காலச்செந்தீ -காலாக்கினிகள்; விண்டன - வெளிப்பட்டன; கீழும் - மண்ணுலகமும்;மேலும் - விண்ணுலகமும்; கீண்டு வெடித்தன - வெடித்துச் சிதறின. ஊழிக்காலத்தில்,ஆதிசேடனின் விடக் கனலும் சிவபிரானின் நெற்றித் தழலும் வடவாமுகாக்கினியும் உலகை அழிக்கும். ஆதலின் செந்தீ விண்டன என்று கூறப்பெற்றது. தீ - பால்பகா அஃறிணைப் பெயர். நோக்கிக் கண்டனன் - உற்றுப் பார்த்தான். ஆழ்வார், என் நெஞ்சினால் நோக்கிக் காணீர் என்பர். (திவ்ய திருவாய் 5.5-2). சில பிரதிகளில் பின் இரண்டடி முன்னே இருப்பதாகக் கூறப்பெறுகிறது. அதுவே சரி என்று தெரிகிறது. தோள் - கை. 'எண்டோள் வீசி நின்று ஆடும்பிரான்' என்று சான்றோர் பிரயோகம் காண்க (அப்பர் தேவாரம்) மேலே பதினொரு பாடலால் பேசப்பட்ட இராவணனைக் கண்டனன் என்க. (218) |