கொச்சகக் கலி

5053.

தோள்ஆற்றல் என்னாகும் ?
    மேல்நிற்கும் சொல் என்னாம் ?
வாள் ஆற்றுகண்ணாளை
     வஞ்சித்தான் மணிமுடிஎன்
தாள் ஆற்றலால்இடித்துத்
     தலைபத்தும்தகர்த்து இன்றென்
ஆள் ஆற்றல்காட்டேனேல்
     அடியேனாய்முடியேனே !

(சீற்றங்கொண்டஅனுமன்)

     வாள் ஆற்று -வாளை ஒத்த; கண்ணாளை - கண்களை உடைய
சீதாபிராட்டியை; வஞ்சித்தான் - வஞ்சித்துச் சிறை வைத்த இராவணனின்;
மணிமுடி -
மணிகள் பதித்த கீரிடத்தை; என் தாள் ஆற்றலால் -
என்னுடைய கால் வலிமையால்; இடித்து - தாக்கி; பத்துத் தலையும் - பத்து
தலைகளையும்; தகர்த்து - பொடிப் பொடியாக்கி; இன்று - இன்றைய
தினத்தில்; என் - என்னுடைய;  ஆள் ஆற்றல் - அடிமையின் வலிமையை;
காட்டேனேல் -
காட்டாமற் போனால்; தோள் ஆற்றல் - (என்னுடைய)
தோளின் வலிமை; என்னாகும் - என்ன பயனுடையதாகும்; மேல் -
இனிமேல்; நிற்கும் - நிலை பெற்றிருக்கும்; சொல் - புகழானது;என்னாம் -
என்ன சிறப்பை அடையும் (அன்றி); அடியேனாய் - (யான்) தொண்டு
புரிபவனாக; முடியேன் - கருதப்படமாட்டேன்.

     ஆற்றுதல் -ஒத்தல் 'வையகமும் வானகமும் ஆற்றல் அரிது' என்னும்
தமிழ் மறைக்கு (குறள் - 101) வரைந்த அழகரின் உரையைக் காண்க.

     தோள் ஆற்றல்,மேல் நிற்கும் சொல் என்பனவற்றை இராவணனுக்கு
ஆக்கி, அவை என்முன் என்னாகும்என்று அனுமன் தன்வீரத்தை நினைத்துக்
கூறியதாகவும் கொள்ளலாம்.

     முடியேன் -கருதப்படமாட்டேன். முடிதல் - கருதுதல். அவன் முடிவு
யாதோ என்னும் உலக வழக்கு இப்பொருளைக் காட்டும்.

     நான்கு சீர்களும்காய்ச்சீர் பெற்றும், இத்தகு பாடல்கள் இந்நூலில் 120
காணப்படுகின்றன (மணிமலர் 76)                             (219)