5054.

நடித்துவாழ் தகைமையதோ
     அடிமைதான்? நன்னுதலைப்
பிடித்து, வாழ்அரக்கனார்
    யான்கண்டும் பிழைப்பாரோ ?
ஒடித்துவான்தோள்அனைத்தும்
     தலைபத்தும்உதைத்துருட்டி
முடித்து, இவ்வூர்முடித்தால், மேல்
     முடிவதெலாம்முடிந்தொழிக.

     அடிமை - தொண்டின் இயல்;நடித்து - பாவனை செய்து (அதனால்);
வாழ் - உயிர் வாழ்கின்ற; தகைமையதோ  - தன்மையுடையதா ?;
நன்னுதலை - அழகிய நெற்றியுடைய பிராட்டியை; பிடித்து -
சிறையிலடைத்துவிட்டு; வாழ் அரக்கனார் - வாழ்கின்ற இராவணனை; யான்
கண்டும் -
யான் பார்த்த பிறகும்; பிழைப்பாரோ - (அழியாமல்) தப்புவரோ
?; வான்தோள் அனைத்தும் - (இராவணணின்) பெரிய தோள்கள்
யாவற்றையும்; ஒடித்து - முறித்து; தலை பத்தும் - பத்துத் தலைகளையும்;
உதைத்து - காலாலே தாக்கி; உருட்டி - (பூமியிலே) உருளச் செய்து; முடித்து
-
(இராவணனைக்) கொன்று; இவ் ஊர் - இந்த இலங்கையை; முடித்தால் -
அழித்தால்; மேல் - பிறகு; முடிவது எல்லாம் - நடக்க வேண்டியவை
யாவும்; முடிந்தொழிக - நடக்கட்டும்.

     நடித்தல் -பாவனை செய்தல். பாசாங்கு செய்தல். நாடகத்தால் உன்
அடியார்போல் நடித்து (திருவாசகம்).

     முடிவது - நடப்பது.ஒழிக - வெறுப்பைக் காட்டும் சொல். 'கெடுத்து
ஒழிந்தனை உன்னையும் என்னையும்' (கம்ப. 6212)              (220)