அனுமன் அந்நினைவுஒழிதல்

5055.

என்றுஊக்கி, எயிறு கடித்து,
     இரு கரமும்பிசைந்து, எழுந்து
நின்று, ஊக்கி,உணர்ந்து உரைப்பான்
     நேமியோன்பணி அன்றால்
ஒன்று ஊக்கிஒன்று இழைத்தல்
     உணர்வுஉடைமைக்கு உரித்து அன்றால்
பின்தூக்கின்இதுசாலப்
     பிழை பயக்கும் எனப் பெயர்ந்தான்.

     என்று - என்று கருதி; ஊக்கி - ஊக்கம் பெற்று; எயிறு கடித்து -
தன்னுடைய பற்களைக் கடித்து; இருகரமும் பிசைந்து - இரண்டு கைகளையும்
பிசைந்து; எழுந்து நின்று - எழுந்து சென்று நின்று; ஊக்கி - (பிறகு) சினம்
நெகிழ்ந்து; உணர்ந்து - ஆராய்ந்து; உரைப்பான் - (தனக்குள்)
(பின்வருமாறு) கூறுபவனானான். (இராவணனையும் இலங்கையையும் அழித்தல்)
நேமியோன் - இராமபிரானின்; பணி அன்று - கட்டளை அன்று (அன்றியும்);ஒன்று ஊக்கி - ஒரு செயலைச் செய்யத் தொடங்கி; ஒன்று
இழைத்தல் -
வேறு செயலைச் செய்தல்; உணர்வு உடைமைக்கு -
அறிவாகியசெல்வத்துக்கு; உரித்து அன்று - உரிமையான செயலன்று; பின் -
பிறகு;தூக்கின்  - ஆராய்ந்தால்; இது - யான் எண்ணிய இச்செயல்; சால -
மிகுதியாக; பிழை பயக்கும் - துன்பத்தை உண்டுபண்ணும்; என - என்று
நினைத்து; பெயர்ந்தான் - பின் வாங்கினான்.

     பின்வாங்குதல்,செயல் செய்யாமல் ஒதுங்குதல். ஊக்கி உணர்ந்து,
என்பதில் உள்ள ஊக்கி என்பது நெகிழ்ந்து என்னும் பொருள் தந்தது.
முயங்கிய கைகளை ஊக்க என்னும் பகுதிக்கு (குறள் 1238) அழகர் தழுவிய
கைகளைத் தளர்த்தினேன் ஆக என்று உரை வரைந்தார் ஒன்று ஊக்கி, ஒன்று
இழைத்து என்பதில் உள்ள ஊக்கி என்பது செய்யத் தொடங்கி என்னும்
பொருள் தந்தது.                                             (221)