5060. | கொன்றானோ ? கற்பழியாக் குலமகளை ?கொடு்ந்தொழிலால் தின்றானோ ?எப்புறத்தே செறித்தானோ சிறை ? சிறியேன் ஒன்றானும்உணரகிலேன்; மீண்டுஇனிப்போய் என்னுரைக்கேன் பொன்றாதபொழுது, எனக்கு இக் கொடுந்துயரம் போகாதால். |
(இராவணன்) கற்பு அழியா- கற்பு நிலையிலிருந்து பிறழாத; குலமகளை - தூய பிராட்டியை; கொன்றானோ - கொன்றுவிட்டானோ; கொடுந்தொழிலால் - (புலால் உண்ணும்) கொடிய செயலால்; தின்றானோ - தின்று விட்டானோ; எப்புறத்தே - எந்த உலகத்தில்; செறித்தானோ - சிறையில் அடைத்து வைத்தானோ; சிறியேன் - அற்ப அறிவுடைய யான்; ஒன்றானும் - ஒரு சிறிதும்; உணரகிலேன் - அறியாதவனாய் உள்ளேன்; இனி - இனிமேல்; மீண்டும் போய் - திரும்பிச் சென்று (இராமபிரானுக்கு); என் உரைக்கேன் - யாது கூறுவேன்; இக் கொடுந்துயரம் - (பிராட்டியைக் காணாத) இப்பெருந்துன்பம்; பொன்றாத பொழுது - செத்தால் அன்றி; எனக்கு - (மானமுடைய) எனக்கு; போகாது - நீங்காது. இறந்தால்துன்பம் நீங்கும் என்பது கருத்து. ஆல் - அசை. ஒன்றானும் - சிறிதும். ஒன்று ஆயினும் என்பது ஒன்றானும் என வந்தது. ஒன்று - சிறிது. ஓம்படை ஒன்றும் சொல்லாள் (சிந்தா - 232) இனியர் பரிகாரம் சிறிதும் கூறாளாய், என எழுதினார். ஆனும் என்பது ஆயினும் என்பதன் திரிபு. (226) |