5066.

எருவைக்கு முதலாய
     சம்பாதி'இலங்கையில் அத்
திருவைக்கண்டனென்' என்றான்
     அவன்உரையும் சிதைந்த தால்;
கருவைக்கும்நெடுநகரைக்
     கடலிடையேகரையாதே
உருவைக் கொண்டு, இன்னமும் நான்
     உளென் ஆகஉழல்கேனோ ?

     எருவைக்கு -கழுவின்இனங்களுக்கு; முதலாய - தலைவனான;
சம்பாதி -
சம்பாதியானவன்; இலங்கையில் - இலங்கை மாநகரில்;
அத்திருவை -
அந்த பிராட்டியை; கண்டனென் - பார்த்தேன்; என்றான் -
என்று கூறினான்; அவன் உரையும் - அவன் கூறிய மொழியும்; சிதைந்தது -பொய்யாகி விட்டது; கருவைக்கும் - (இரத்தினம் முதலானவற்றை)
கருப்பமாகவைக்கப் பெற்ற; நெடுநகரை - பெரிய இலங்கையை; கடலிடை -
கடலிலே;கரையாதே - கரைக்காமல்; இன்னமும் - இன்னும்; உருவைக்
கொண்டு -
(பயன்படாத) உடம்பைக் கொண்டு; உளென் ஆகி - உயிருடன்
இருப்பவனாய்; உழல்கேனோ - வருந்துவேனோ.

     எருவை - கழுகு. உரைசிதைதல் ஆவது பொய்யாதல். கரு என்பது ஒரு
நகரையோ, கோயிலையோ அமைக்குமுன் பூமியின் அடியில் புதைக்கப்படும்
இரத்தினம் பொன் முதலானவை. இவ்வாறு கரு அமைந்ததை
சிறுபாணாற்றுப்படை பேசும். கருவொடு பெயரிய நன்மா இலங்கை (சிறுபாண்
119-120) இனியர் 'கருப்பதித்த முகூர்த்தத்தாலே ஒருவராலும் அழித்தற்கரிய மா
இலங்கை என்றார். இம்மாவிலங்கை என்பது திண்டிவனம் அருகில் உள்ள
சிற்றூர். அவ்வுரையின் அடிப்பகுதியில், தமிழ்த்தெய்வம் (உவே.சா)
கருவைக்கும் நெடுநகரம் என்ற பகுதியை மேற்கோள் காட்டியதைப்
பார்க்கவும். கர்ப்பநியாசம் என்னும் கோவில் வழக்கை நினைக்கவும்.    (232)