5070.

என்று,சோலை புக்கு எய்தினன், இராகவன் தூதன்;
ஒன்றி வானவர் பூமழை பொழிந்தனர் உவந்தார்;
அன்று, அவ் வாள்அரக்கன் சிறை அவ் வழி வைத்த
துன்று அல்ஓதிதன் நிலை இனிச் சொல்லுவான்
                                  துணிந்தாம்.

     என்று - என்று சிந்தித்து;இராகவன் தூதன் - இராமபிரானின்
தூதனான அனுமன்; சோலை புக்கு எய்தினன் - சோலைக்குள் சென்று
சேர்ந்தான்; (அப்போது) வானவர் - தேவலோகத்தி்ருப்பவர்; ஒன்றி பூ மழை
பொழிந்தனர் -
ஒன்று சேர்ந்து பூமாரி பொழிந்து; உவந்தார் - மகிழ்ச்சி
அடைந்தனர்; இனி - இனிமேல்; வாள் அரக்கன் - வாள் ஏந்திய
இராவணனால்; அவ்வழி சிறைவைத்த - அச் சோலையில் சிறை
வைக்கப்பெற்ற; அல் துன்று ஓதிதன் - இருள் போன்ற கூந்தலையுடைய

பிராட்டியின்;அன்று நிலை - அப்போதைய நிலைமையை; சொல்லுவான்
துணிந்தாம் -
சொல்லுவதற்குத் துணிந்தோம்.

     அல்துன்று ஓதி -இருள் போன்ற கூந்தல். துன்று - உவமச் சொல்.
(சிந்தாமணி. 2490 நச்) உவமச் சொல்லாவது வினைச் சொற்களை உவம உருபு
போலப் பயன்படுத்தல்.                                         (2)