5082.

'என்னை, நாயகன், இளவலை, எண்ணலா
                                வினையேன்
சொன்னவார்த்தை கேட்டு, "அறிவு இலள்" எனத்
                                துறந்தானோ ?
முன்னை ஊழ்வினைமுடிந்ததோ ?' என்று, என்று,
                                முறையால்
பன்னி, வாய்புலர்ந்து, உணர்வு தேய்ந்து, ஆர் உயிர்
                                பதைப்பாள்.

     இளவலை - இளைய பெருமாளை;எண்ணலா வினையேன் - மதியாததீவினையைச் செய்த யான்; சொன்ன வார்த்தை - கூறிய
கொடுஞ்சொற்களை;கேட்டு - கேள்விப்பட்டு; நாயகன் - இராமபிரான்;
என்னை அறிவு இலள்எனத் துறந்தானோ ? - (அன்புக்குரிய) என்னை
அறிவற்றவள் என்று கருதிஒதுக்கித் தள்ளி விட்டானோ; (அல்லது) முன்னை
ஊழ்வினை -
பழையதீவினையானது; (என்னைத் துன்புறுத்துவதென்று)
முடிந்ததோ - தீர்மானித்துவிட்டதோ; என்று என்று - என்று என்று
(பலபடியாக); முறையால் -வரிசைப்படி; பன்னி - சொல்லிச் சொல்லி; வாய்
புலர்ந்து -
நா வறண்டு;உணர்வு தேய்ந்து - உணர்ச்சி தளர்ந்து; ஆர்
உயிர் பதைப்பாள் -
அரியஉயிர் துடித்து வருந்துவாள். 

     முடிதல் -தீர்மானித்தல். பன்னி - திரும்பத் திரும்பச் சொல்லி
ஊழ்வினை முடிந்ததோ என்பதற்கு - முற்பிறப்பில் செய்த கரும வசத்தினால்
நேர்ந்ததோ என்றும் (வை.மு.கோ.) பூர்வகர்ம பலன் அவர் வேண்டா என்று
சொல்லும்படி முடிதல் ஆயிற்றோ என்றும் (வி.கோ) கூறப்படுகிறது. ஊழ்வினை
முடிந்ததோ என்பதற்கு எழுமையும் தொடர்ந்த அன்பு முடிந்ததோ என்றும்
கூறலாம். ஊழ்வினையால் உள்ளம் சுடுமால் என்னும் தொடருக்கு (சீவக
குணமாலை 114) நச்சர் உழுவல் அன்பாலே என் உள்ளத்தைச் சுடாநின்றது
என்று உரை வகுத்தார். இப் பாடலில் உள்ள நாயகன் என்னும் எழுவாயை 15,
16, 17 ஆம் பாடல்களில் சேர்க்க.                                (14)