5085.

'பெற்ற தாயரும், தம்பியும், பெயர்த்தும் வந்து எய்தி,
கொற்ற மா நகர்க் கொண்டு இறந்தார்களோ ?
                                     குறித்துச்
சொற்ற ஆண்டு எலாம் உறைந்தன்றி, அந் நகர்
                                   துன்னான்,
உற்றது உண்டு'எனா, படர் உழந்து, உறாதன
                                   உறுவாள்.

     பெற்ற தாயரும் -தன்னைப்பெற்றெடுத்த தாயார்களும்; தம்பியும் -
தம்பியாகிய பரதனும்; பெயர்த்தும் வந்து எய்தி - மறுபடியும் காட்டுக்கு
வந்து இராமபிரானை அடைந்து; கொற்ற மாநகர் - வெற்றி யுடைய
அயோத்திக்கு; கொண்டு எழுந்தார்களோ - (இராமபிரானை)
அழைத்துக்கொண்டு போய்விட்டார்களோ; (இராமபிரான்) குறித்து -
குறிப்பிட்டு; சொற்ற ஆண்டு எலாம் - (கைகேயி) கூறிய பதினான்கு
வருடமும்; உறைந்து அன்றி - காட்டிலே தங்கித் திரும்புவானே தவிர; அந்
நகர் துன்னான் -
(உரிய காலத்துக்கு முன்) அந்த அயோத்தியை யடையான்;
உற்றது உண்டு எனா - இராமபிரானுக்கு நேர்ந்த துன்பம் பெரியது என்று;
(பிராட்டி) படர் உழந்து - துன்பத்தால் மனம் சிதைந்து; உறாதன உறுவாள் -எவரும் அடையாத துன்பத்தால் வருந்துவாள்.

     உண்டு - பெரியது.'உண்டு இடுக்கண் ஒன்று உடையான்' என்பது (கம்ப.
2333.) கம்பர் வாக்கு. அங்கு பெரிது என்றும் பொருள் கொள்க. பாடலின்
சிக்கல் தீரும். உண்டெனத் தருக நாட்டு வழக்கு.                  (17)